‘‘இந்திய வீரர் தோனி தான் அனைத்து காலத்துக்கும் சிறந்த வீரர்,’’ என, சோயப் மாலிக் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக இருந்தவர் தோனி. டெஸ்ட் அரங்கில் இந்தியாவை ‘நம்பர்–1’ இடத்துக்கு அழைத்துச் சென்ற இவர், மூன்று விதமான உலக கோப்பை (2007ல் ‘டுவென்டி–20’, 2011ல் 50 ஓவர், 2013ல் சாம்பியன்ஸ் டிராபி) பெற்றுத் தந்து சாதனை படைத்தார். சமீபத்தில் இவர், தனது 300வது ஒருநாள் போட்டியில் விளையாடினார். உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த தோனி, போட்டியின் போது களத்தில் ‘கூலாக’ செயல்படுவது தனிச் சிறப்பு. இதனால் இவரை எதிரணியினருக்கும் மிகவும் பிடிக்கும். இதற்கு, பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக் மட்டும் விதிவிலக்கல்ல.
மாலிக், ‘டுவிட்டரில்’, தனது ரசிகர்களுடன் கேள்வி, பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது இந்திய ரசிகை ஒருவர், தோனி குறித்து கூறுமாறு கேட்டுள்ளார். இதற்கு சோயப் மாலிக், ‘அனைத்து காலத்துக்கும் சிறந்த வீரர் தோனி தான், ’என, பதில் தெரிவித்திருந்தார். இதற்கு இந்தியா மட்டுமல்லாமல் பாகிஸ்தானில் உள்ள ரசிகர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.