தமிழ் சினிமாவில் இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு ‘ஸ்பூப்’ வகை சினிமாவை அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் சி.எஸ்.அமுதன். அவர் இயக்கத்தில் சிவா நடித்த ‘தமிழ்ப் படம்’ 2010ம் ஆண்டு வெளிவந்து கமர்ஷியல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு அமுதன் இயக்கிய ‘ரெண்டாவது படம்’ வெளிவராமல் பல வருடங்களாக முடங்கிக் கிடக்கிறது. இருப்பினும் ‘தமிழ்ப் படம் 2.0’ படத்தை எடுத்த முடித்துவிட்டார். இன்று இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.
டீசரில் ஓ.பன்னீர்செல்வம் முதல் விஷால் வரை பலரையும் கிண்டலடித்திருக்கிறார்கள். கடந்த சில வருடங்களில் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்ட முன்னணி நடிகர்களின் படங்களின் காட்சிகள் இந்த டீசரில் இடம் பெற்றுள்ளன. ஏற்கெனவே, விஜய், அஜித் ரசிகர்களுக்கு இடையில் பல தகராறு உள்ளது. இதற்கிடையில் இந்தப் படத்தின் டீசரில் அவர்களையும் விட்டுவைக்காமல் கிண்டலடித்திருக்கிறார்கள். இதனால், அவர்களது ரசிகர்களும் சேர்ந்து இந்தப் படத்தை எதிர்ப்பார்களா என்பது படம் வந்தால்தான் தெரியும்.
ஆனால், டீசரைப் பார்த்து சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகிறார்கள். டீசர் வெளியான ஐந்து மணி நேரத்திலேயே 10 லட்சம் பார்வைகளைக் கடந்திருக்கிறது.