சென்னை மண்டல தணிக்கை அதிகாரிக்கும், ரிவைசிங் கமிட்டிக்கும் கடந்த சில வருடங்களாகவே ஒரு பனிப்போர் நடைபெற்று வருகிறது. தணிக்கை அதிகாரி ஏ சான்றிதழ் வழங்கிய படத்துக்கு ரிவைசிங் கமிட்டியில் யு சான்றிதழ் வழங்குவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருவதன் மூலம் இந்த பனிப்போர் அவ்வப்போது வெட்டவெளிச்சமாகி வருகிறது.
இதற்கு லேட்டஸ்ட் உதாரணமாக இன்னொரு சம்பவம் நடைபெற்றுள்ளது. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ், மேகா ஆகாஷ் நடித்த படம் ஒரு பக்க கதை. இப்படத்தை தணிக்கைக்கு அனுப்பியபோது, படத்தில் ஒரு காட்சியில் மருத்துவரிடம் கதாநாயகி பேசும் போது Intercourse என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார்.
இந்த வார்த்தையை நீக்க வேண்டும் என்று தணிக்கைக் குழுவில் தெரிவிக்க, அதற்கு படக்குழு மறுப்பு தெரிவித்தது. இதனால் ஒரு பக்க கதை படம் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர், ஒரு பக்க கதை படத்தை மறுதணிக்கைக்கு விண்ணப்பித்தார்கள். படத்தைப் பார்த்த ரிவைசிங் கமிட்டி Intercourse வார்த்தைக்கு அனுமதியளித்தது மட்டுமல்ல யு சான்றிதழும் வழங்கியுள்ளார்கள். ஒரு பக்க கதை படத்துக்கு ரிவைசிங் கமிட்டி யு சான்றிதழ் வழங்கியுள்ளதை அடுத்து தணிக்கைப் பிரச்சினை முடிவு வந்துள்ளது.