டி.என்.பி.எல்., தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்றில், இன்று கோவை, சேப்பாக்கம் அணிகள் மோதுகின்றன.
டி.என்.பி.எல்., தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ‘நடப்பு சாம்பியன்’ துாத்துக்குடி அணி, இரண்டாவது முறையாக பைனலுக்கு முன்னேறி விட்டது.
இதனிடையே, இன்று திருநெல்வேலியில் நடக்கும் தகுதிச்சுற்று 2ல் கோவை, சேப்பாக்கம் அணிகள் மோதுகின்றன. சேப்பாக்கம் அணி லீக் சுற்றில் 7ல் 6 போட்டிகளில் வென்றது. தகுதிச்சுற்று 1ல் துாத்துக்குடி அணியிடம் மோசமாக விளையாடி தோற்றது. தவிர, இந்த அணிக்கு எதிராக தொடர்ந்து நான்காவது முறையாக வீழ்ந்தது. இந்த சோகத்தை மறந்து, இன்றைய போட்டியில் சாதிக்க கேப்டன் ராஜகோபால் சதீஷ், தலைவன் சற்குணம், கோபிநாத் கைகொடுக்கலாம். பவுலிங்கில் சாய் கிஷோர் மட்டும் நம்பிக்கை தருகிறார்.
கோவை நம்பிக்கை: கோவை அணியை பொறுத்தவரையில் முதல் 4 போட்டியில் 2 மழையால் கைவிடப்பட, 1 வெற்றியுடன் 4 புள்ளிகள் மட்டும் பெற்றிருந்தது. கேப்டன் முரளி விஜய் வருகை இந்த அணிக்கு எழுச்சி தந்தது.
திருவள்ளூர் (197/3), திருச்சி (135/3) அணிகளுக்கு எதிராக சிறப்பாக ‘சேஸ்’ செய்து வென்றது. ‘எலிமினேட்டர்’ போட்டியில் காரைக்குடி அணிக்கு எதிராக மீண்டும் பெரிய இலக்கை (194/6) ‘சேஸ்’ செய்து வென்றது.
இந்த நம்பிக்கையுடன் களமிறங்கும் கோவை அணிக்கு 46 பந்தில் சதம் அடித்த ரவிகுமார் ரோகித், சூர்ய பிரகாஷ், அனிருத் உதவுவர் என நம்பலாம். இன்று வெல்லும் அணி, ஆக., 20ல் சென்னையில் நடக்கும் பைனலில், துாத்துக்குடியை எதிர்த்து மோதும்.

