முன்னாள் கேப்டன் பிரண்டன் டெய்லர், மீண்டும் ஜிம்பாப்வே அணி சார்பில் விளையாட உள்ளார்.
ஜிம்பாப்வே கிரிக்கெட் நட்சத்திரம் பிரண்டன் டெய்லர், 31. ஒரு நாள் அணியை வழிநடத்திய இவர், இதுவரை 23 டெஸ்ட் (1493 ரன்), 167 ஒரு நாள் (5258), 26 ‘டுவென்டி–20’ (594) போட்டிகளில் விளையாடி உள்ளார். கடைசியாக, இந்தியாவுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் (2015) விளையாடினார். பின், இங்கிலாந்தின் கவுன்டி சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் நாட்டிங்காம்ஷயர் அணியில் 3 ஆண்டுக்கு ஒப்பந்தம் ஆனார். இதனால், ஜிம்பாப்வே அணியிலிருந்து விலகினார். இந்த ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடித்துள்ளதால், மீண்டும் டெய்லர் தேசிய அணியில் இடம்பெற உள்ளார்.
பிரிவது கடினம்: இது குறித்து பிரண்டன் டெய்லர் கூறுகையில்,‘‘நாட்டிங்காம்ஷயர் அணியுடன் இணைந்து செயல்பட்டது மகிழ்ச்சி. கடந்த 3 ‘சீசனில்’ அதிக நண்பர்களை பெற்றுள்ளேன். கடந்த 3 மாதங்களில் இரண்டு கோப்பை வென்றுள்ளோம். இப்படி உற்சாகம் தந்தாலும், எனது மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழ்வது கடினமாக உள்ளது. இதனால், மீண்டும் ஜிம்பாப்வே அணிக்கு திரும்புகிறேன்,’’ என்றார்.
அடுத்த மாதம் சொந்த மண்ணில் நடக்கவுள்ள வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் டெய்லர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.