கான்பூரில் நடந்து வரும் துலீப் டிராஃபி போட்டியில், இந்தியா ரெட் அணி வீரர் பாபா இந்திரஜித் சதமடித்து அசத்தியுள்ளார். இந்தியா ரெட், இந்தியா கிரீன், இந்தியா புளூ ஆகிய 3 அணிகள் மோதும் 56-வது துலீப் டிராஃபி போட்டிகள் உத்திர பிரேதசத்தின் லக்னோ, கான்பூர் நகரங்களில் நடந்து வருகின்றன. துலீப் டிராஃபி போட்டிகள் ‘டெஸ்ட் ஃபார்மேட்டில்’ நான்கு நாள்கள் நடக்கும்.
நேற்று தொடங்கிய இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா ரெட், இந்தியா புளூ அணிகள் மோதின. முதலில் ஆடிய தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்தியா ரெட் அணி, சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்துகொண்டிருந்தது. இதற்கிடையில் நான்காம் விக்கெட்டுக்குக் களமிறங்கிய தமிழக வீரர் பாபா இந்திரஜித் ‘தனி ஒருவனாக’ப் போராடினார். விக்கெட்டுகள் விழாமல் பொறுமையாக ஆடினாலும் பந்துகளை வீணாக்காமல் ரன் சேர்க்கவும் தவறவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக், ரிசப் பன்ட் சொற்ப ரன்களில் வெளியேற ‘டெயிலு’டன் கைகோர்த்தார் இந்திரஜித்.
ஒருகட்டத்தில் 159 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா ரெட். 200 ரன்களே கேள்விக்குறியாக இருந்த நிலையில் சித்தார்த் கவுலோடு பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்கள் சேர்த்தார் அவர். பின்னர் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் வீழ, 205 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள். கடைசி விக்கெட்டுக்குக் களமிறங்கிய விஜய் கோஹிலை வைத்துக்கொண்டு அடித்து ஆடினார் இந்திரஜித். இவர்கள் இருவரும் கடைசி விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 18.1 ஓவர்களில் 86 ரன்கள் சேர்த்து அசத்தி அவுட் ஆகாமல் களத்தில் நிற்கின்றனர். முதல் நாள் முடிவில் இந்திய ரெட் அணி 84 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் குவித்தது.
181 பந்துகளைச் சந்தித்த இந்திரஜித் அவுட் ஆகாமல் 120 ரன்கள் குவித்து அமர்க்களப்படுத்தினார். முதல் தர போட்டிகளில் இந்திரஜித் அடிக்கும் ஐந்தாவது சதம் இது. முதல் போட்டியில் ஆடிய இஷாங் ஜக்கிக்கு மாற்றாகத்தான் இந்தப் போட்டியில் இந்திரஜித் இடம்பெற்றார். தன் அற்புதமான ஆட்டத்தால் அணியின் முடிவைச் சரியாக்கியுள்ளார் அவர். லக்னோவில் நடைபெற்ற இந்தியா கிரீனுடனான முதல் போட்டியில் மற்றொரு தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் முதல் இன்னிங்சில் அரை சதமும், இரண்டாவது இன்னிங்சில் சதமும் அடித்து அசத்தியிருந்தார். இப்போது இரண்டாவது போட்டியில் இந்திரஜித் பட்டையைக் கிளப்பியுள்ளார்!
யார் இந்த இந்திரஜித்?
இந்திரஜித் – 19 வயதிலேயே தமிழக அணிக்காக ரஞ்சிப் போட்டியில் அறிமுகமானவர். சி.எஸ்.கே, புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகளில் இடம்பெற்றிருந்த பாபா அபாரஜித்தின் சகோதரர். வலது கை பேட்ஸ்மேனான இவர், TNPL தொடரில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டிருந்தார். IPL, TNPL போன்ற போட்டிகளில் ஜொலிக்கத் தேவையான அதிரடி ஆட்டம் இவரது பாணி இல்லை என்றாலும், நல்ல, ஸ்ட்ராங்கான இன்னிங்ஸை ஏற்படுத்துவதில் இவர் கில்லாடி. மிடில் ஆர்டரில் பேட்ஸ்மேனான இவர் இதுவரை 32 முதல் தர போட்டிகளில் விளையாடி சராசரி 43.35 வைத்துள்ளார் (இந்தப் போட்டியைச் சேர்க்காமல்). 10 அரைசதங்களும் அடித்துள்ளார். இப்போது இவருக்கு வயது 23 தான். தனது பேட்டிங் யுக்திகளைப் பலமாக்கிக்கொள்ளும் பட்சத்தில் நிச்சயம் பெரிய வாய்ப்புகள் இந்திரஜித்தின் வாசலில் நிற்கும்!
