கடந்த நவம்பர் 1-ம் தேதி நெஹ்ரா பிரியாவிடை இந்தியா-நியூஸி. டி20 போட்டியில் கூடுதல் இலவச பாஸ்களுக்காக டெல்லி கிரிக்கெட் சங்கத்துக்கு டெல்லி மாநகராட்சி அதிகாரிகளும் போலீஸ் அதிகாரிகளும் கடுமையான நெருக்கடி கொடுத்ததாக, உச்ச நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட டெல்லி கிரிக்கெட் நிர்வாகியும் நீதிபதியுமான விக்ரம்ஜித் சென் (ஓய்வு) கடுமையாகச் சாடியுள்ளார்.
இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்துக்கு அவர் கூறியதாவது:
போதுமான பாஸ்கள் அளிக்கவில்லை என்று ஆட்டம் தொடங்கும் முன் வீரர்கள் சமையலறையை மூடினர். மதியம் 3.25க்கு கூடுதல் பாஸ்கள் அளித்த பிறகே சமையலறைக் கதவைத் திறந்தனர்.
அதே போல் டெல்லி போக்குவரத்துத் துறை போலீஸும் போதிய பாஸ்கள் அளிக்கவில்லை என்று உணவு வண்டிகளை உள்ளே விடாமல் நிறுத்தினர். உதவ வேண்டியவர்கள் கடும் இடையூறுகளை பாஸ்களுக்காக ஏற்படுத்தினர்.
பொதுவாக கார் நிறுத்துமிடத்துக்கு போலீஸ் துறை 250 பாஸ்களை அளிக்கும், ஆனால் இம்முறை 60 பாஸ்களையே அளித்து தொந்தரவு செய்தது. இது குறித்து நான் கடிதம் எழுதினேன், ஆனால் அனுமதி கொடுத்தது குப்பை வண்டிகளுக்கும், 20 ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு மட்டுமே.
குறிப்பாக போலீஸ் செய்த இடையூறு அதிர்ச்சியளித்தது. ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் போது கதவுகளை திறந்து நிறைய பேர்களை உள்ளே அனுமதித்தனர், சர்வதேச போட்டி நடந்து கொண்டிருக்கிறது, பாதுகாப்பு பிரச்சினை பற்றி கவலையில்லாமல் அவர்கள் இப்படி நடந்து கொண்டதன் சிசிடிவி பதிவுகள் உள்ளன. எப்போதும் கூடுதல் பாஸ்களைக் கேட்டுக் கொண்டேயேருந்தனர்.
அரசு அதிகாரிகள், குறிப்பாக போலீஸ் துறையினர் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். இந்தப் போக்கை தட்டிக் கேட்க வேண்டும். அடுத்த முறை டெல்லி போலீஸை நான் அனுமதிக்கப்போவதில்லை. பாதுகாப்புக்காக மட்டுமே அவர்கள் வர வேண்டும்.
இவர்கள் அதிகாரத்தினால் அந்தப் போட்டிக்கு சிறப்பு அழைப்பாளியாக அழைக்கப்பட்ட பிஷன் பேடியை கேட் அருகே தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால் யார் யாருக்கோ திறந்து விட்டனர். நெஹ்ராவுக்காக அவர் அன்று அழைக்கப்பட்டிருந்தார். வயதானவர் அவர் வரமுடியாமல் நின்று கொண்டிருந்தால் என்ன அர்த்தம்? எங்களுக்குத் தகவல் வர நாங்கள் கேட் பகுதிக்கு விரைந்த போது அங்கு பிஷன் பேடி வெளியில் நின்று கொண்டிருந்தார்.
டிசம்பரில் டெல்லியில் டெஸ்ட் போட்டி நடக்கும் போது கிரிக்கெட் ரசிகர்கள் வரவே போவதில்லை
இவ்வாறு கூறினார். டெல்லி போலீஸுக்கு மட்டும் 650 பாஸ்கள் வழங்கப்பட்டன. வழக்கம் போல் போலீஸ் துறை இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.