ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில், இந்தியாவின் சதீஷ்குமார் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம், ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில், 77 கிலோ எடைப் பிரிவில் பங்குபெற்றார். ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில், சீனியர் பிரிவில் மோதிய சதிஷ்குமார், இந்தியாவுக்குத் தங்கம் வென்று தந்துள்ளார்.
இந்தப் போட்டியில், சதீஷ்குமார் முறையே 148 கிலோ மற்றும் 172 கிலோ என மொத்தம் 320 கிலோ எடையைத் தூக்கி தங்கம் வென்றார். மற்றொரு பிரிவான பளுதூக்குதல் ஜூனியர் பிரிவில், இந்தியாவின் மற்றொரு வீரரான ராகுல், தங்கம் வென்று அசத்தினார். இந்த வெற்றியின்மூலம் இந்தியாவின் சதீஷ்குமார் மற்றும் ராகுல் இருவரும், அடுத்த 2018-ம் ஆண்டு நடைபெற உள்ள காமன்வெல்த் நாடுகளுக்கு இடையேயான போட்டியில் விளையாட நேரடியாகத் தகுதிபெற்றுள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம், கடந்த 2014-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.