கன்னியாகுமரியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதல் வலையில் சிக்க வைத்து ஏமாற்றி நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியைக் காணவில்லை என்று காவல்நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர்.
புகாரை தொடர்ந்து சிறுமியை போலீஸார் தேடிவந்த நிலையில் வெள்ளிக்கிழமை அன்று மார்த்தாண்டம் அருகே விரிகோடு என்னும் பகுதியில் ஒரு சிறுமியை நான்கு பேர் இரு சக்கர வாகனத்தில் கடத்தி செல்ல முற்பட்டதை பொதுமக்கள் பார்த்தனர்.
அவர்களை பிடித்து விசாரித்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற போலீஸார் சிறுமியிடம் விசாரித்த போது அவர் கருங்கல்லில் காணாமல் போனதாக புகாருக்கு ஆளான சிறுமி என்பது தெரியவந்தது.
இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் குளச்சல், குறும்பனை பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. அந்த சிறுமியிடம் போலீஸார் விசாரணையின் போது, தம்மை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் தன் வீட்டின் அருகில் உள்ள ஒரு இளைஞர் காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்தார்.
கடந்த 9-ம் தேதி காதலித்த இளைஞர் என் வீட்டிலிருந்து என்னை அழைத்து சென்று, குளச்சல் பகுதியில் உள்ள ஒரு தங்கும்விடுதியில் வைத்து 4 இளைஞர்களுடன் பாலியல் உறவிற்கு ஆட்படுத்தினர். பின்னர் அங்கிருந்து வேறு பகுதிகளுக்கும் அழைத்து செல்லப்பட்டு காதலனின் நண்பர்களான வெவ்வேறு இளைஞர்களும் தம்மை வன்கொடுமை செய்தனர்.
நாகர்கோவிலுக்கு அழைத்து செல்ல குறும்பனை மற்றும் குளச்சல் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுடன் சென்ற போதுதான், பொதுமக்கள் தம்மை மீட்டதாக , அந்தச் சிறுமி தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் பல இளைஞர்களையும், சிறுமியின் காதலனையும் போலீஸார் தேடி வருகின்றனர்.