ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படம் வரும் 7ம் தேதியன்று வெளியாக உள்ளது. இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், நேற்றுதான் படத்தின் ஏரியா விற்பனை முடிவடைந்தது. படத்தை தெலுங்கு, ஹிந்தி என இரண்டு மொழிகளிலும் ட்ப்பிங் செய்து வெளிட உள்ளார்கள். இருப்பினும் அங்கெல்லாம் இப்படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சிகளை படக்குழுவினர் நடத்தவில்லை. தூத்துக்குடி விவகாரத்தைக் காரணம் காட்டி, ரஜினிகாந்த் அந்த நிகழ்வுகளை ரத்து செய்துவிட்டார்.
வட இந்தியாவிலும், தெலுங்கிலும் ரஜினிக்கென தனி வியாபாரம் உள்ளது. இந்நிலையில் படத்தை கர்நாடகாவில் வெளியிட கர்நாடகா திரைப்பட வர்த்தகை சபை தடை விதித்துள்ளது. அதை எதிர்த்து ‘காலா’ படக்குழு சார்பில் எந்தவிதமான பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை. கர்நாடகாவில் படம் வெளியாகவில்லை என்றாலும் பரவாயில்லை, அந்த நஷ்டத்தை சமாளித்துக் கொள்ளலாம். காவிரிக்காக ‘காலா’வை கர்நாடகாவில் தியாகம் செய்துவிட்டோம் என எதிர்காலத்தில் ரஜினிகாந்த் தரப்பில் சொல்லிக் கொள்ளவும் ஒரு வாய்ப்பாக இது அமைந்துள்ளது என்றும் சொல்கிறார்கள்.
கர்நாடகாவில் ‘காலா’ வெளியாகவில்லை என்றால் சுமார் 20 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என்கிறார்கள். இருப்பினும் அந்தத் தொகையை வேறு வழியில் ஈடு செய்துவிடலாம் என்று நினைக்கிறார்களாம்.
கர்நாடகா முதல்வரே மக்கள் மனநிலைதான் முக்கியம் என்று சொல்லிவிட்டதால் ‘காலா’ அங்கு வெளியாக வாய்ப்பேயில்லை என்கிறார்கள். ரஜினிகாந்த்தே நேரடியாக களத்தில் இறங்கினால்தான் ஏதாவது நடக்கும். ஆனால், தமிழ்நாட்டில் இருக்கும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் அவர் இறங்க மாட்டார் என்றும் தெரிவிக்கிறார்கள்.
பெங்களூரில் இருக்கும் ரஜினி ரசிகர்கள் ஓசூரில் வந்துதான் படம் பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும் எனத் தெரிகிறது.