சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) புதிய விதிகள், இந்த மாதம் 28-ம் தேதியிலிருந்து அமலுக்குவருகிறது. இருப்பினும், வரும் 17-ம் தேதி தொடங்கி அக்டோபர் 13-ம் தேதி வரை நடக்க இருக்கும் இந்தியா- ஆஸ்திரேலியா தொடரில், தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகளே கடைபிடிக்கப்படும் என்றும் நியூஸிலாந்து சுற்றுப்பயணத்தில் புதிய விதிகள் கடைபிடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.சி.சி-யின் புதிய விதிகள் சரியாக வங்கதேசம் – தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை-பாகிஸ்தான் தொடர்கள் தொடங்கும்போது நடைமுறைக்கு வந்துவிடும்.
வீரர்களின் நடத்தை விதிகள், அம்பயர் முடிவு மறுபரிசீலனை (டி.ஆர்.எஸ்) மற்றும் வீரர்கள் பயன்படுத்தும் உபகரணங்களின் அளவுகள் மீதான புதிய விதிகள், அக்டோபர் 1-ம் தேதியில் இருந்துதான் நடைமுறைக்கு வருவதாக இருந்தது. ஆனால், செப்டம்பர் 27-ம் தேதி வங்கதேசம் – தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகள் தொடங்குவதால், அந்த நாளிலிருந்தே விதிமுறைகளை நடைமுறைப்படுத்தலாம் என ஐ.சி.சி முடிவெடுத்துள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா அணி, ஐந்து ஆட்டங்கள்கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள்கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கின்றன. செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் இந்த சுற்றுப் பயணம், அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வாரம் வரை நீடிக்கும். எனவே, புதிய விதிகளைத் தொடரின் இடையில் நடைமுறைப்படுத்தினால், குழப்பம் வரும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கருதுகிறது. எனவே, குழப்பத்தைத் தவிர்க்க ஆஸ்திரேலியாவுடனான தொடர் முழுவதும் இந்திய அணி தற்போது உள்ள நடைமுறைப்படியே விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளது..
”செப்டம்பர் 28-ம் தேதி தொடங்க உள்ள இலங்கை – பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா – வங்கதேச டெஸ்ட் தொடரின்போதே, புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வரவுள்ளன. செப்டம்பர் 17-ல் இந்தியா – ஆஸ்திரேலியா, இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் லிமிடெட் ஓவர் போட்டிகளில் விளையாடுகின்றன. இந்த இரு லிமிடெட் ஓவர் தொடர்களும் அக்டோபர் மாதம் வரை நீடிப்பதால், ஒரே தொடரில் இரு விதிமுறைகளைப் பின்பற்றுவது குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என, பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விதிமுறை மாற்றத்தின் முக்கிய அம்சம் என்னவெனில், டி.ஆர்.எஸ் முறையைப் பயன்படுத்தி எல்.பி.டபுள்யூவுக்கு கேட்கப்படும் அப்பீல், இனி கணக்கில் வராது. அதாவது, எல்.பி.ட.பிள்யு மீதான அப்பீல் தோல்வியடைந்தாலும், ரிவ்யூக்களின் எண்ணிக்கை குறையாது. அதேபோல, டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில், அதாவது 80 ஓவர்களுக்கு மேல் கேட்கப்படும் ரிவ்யூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட மாட்டாது.
புதிய விதிகளின்படி தவறான நடத்தை, வன்முறை போன்றவற்றுக்காக வீரர்களை மைதானத்தை விட்டு வெளியே அனுப்ப நடுவர்களுக்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, அனைத்துவிதமான விதிமீறல்களும் குற்றங்களும் ஐ.சி.சி-யின் புதிய நடத்தை விதிகளின் கீழேயே முடிவெடுக்கப்படும்.