பெண்களின் சுதந்திரம், நகரங்களிலேயே சர்வசாதாரணமாக சூறையாடப்படுகிறது. குடும்ப வன்முறை, பாலியல் துன்புறுத்தல் போன்றவற்றிலிருந்து தப்பிக்க இன்றளவும் பெண்கள் போராடி வருகிறார்கள். எதிர்க் குரல் கொடுத்து வருகிறார்கள். ’ஆண்கள் இல்லாத உலகம் எவ்வளவு நன்றாக இருக்கும்?’ என்று பல பெண்கள் மனதுக்குள் ஆசைப்படுகிறார்கள். உண்மையிலேயே ஆண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும்? இந்தக் கேள்விக்குத் தங்களின் செயலால் பதிலளிக்கிறது, கென்யா நாட்டின் ஒரு குக்கிராமம்.
சம்புரு (Samburu) என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்கள்தான் இத்தகைய புரட்சிக் கிராமத்தை 1990-ம் ஆண்டில் உருவாக்கினர். இங்கே ஆண்களுக்கு அனுமதி இல்லை. முழுக்க முழுக்க பெண்கள்தான். இவர்களை இப்படி ஒரு முடிவுக்குத் தள்ளியது அங்கே நிலவிய கொடூரமான ஆணாதிக்கம்தான்.
கென்யாவின் வடக்குப் பகுதியிலிருக்கும் இந்தக் குக்கிராமத்தில், பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் ஆதிக்கம் செலுத்திவந்த காலம் அது. வீரர்கள் என்ற பெயரில் நிறையப் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கினார்கள் அந்தக் கோழைகள். தங்களின் இனத்தைச் சேர்ந்த பெண்களுக்கு நிகழும் கொடுமைகளைத் தட்டிக்கேட்க வேண்டிய அந்தப் பகுதி ஆண்களோ, பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளான பெண்களை அடித்துத் துன்புறுத்தினர். அப்படி அடிவாங்கிய பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விஷயம் வெளிச்சத்துக்கு வந்தும், அவர்களுக்கு எந்த நியாயமும் கிடைக்கவில்லை. தவறு செய்த ஆண்களுக்கு எந்தத் தண்டனையும் வழங்கப்படவில்லை. ’தாங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை’ என்பதுபோல சம்புரு இனத்தைச் சேர்ந்த ஆண்களும் உலாவிக்கொண்டிருந்தனர். குழந்தை திருமணம், பெண்ணுறுப்பு சிதைப்பு, குடும்ப வன்முறை என்று பல கொடுமைகளால் பாதிக்கப்பட்டனர் பழங்குடிப் பெண்கள்.
அந்தப் பெண்களின் உரிமைகளுக்காக ஒரு குரல் ஒலிக்க ஆரம்பித்தது. ரெபேக்கா லொலொசோலி (Rebecca Lolosoli) என்கிற அந்தப் பெண், இந்தக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினார். இதனால், அவர் சந்தித்த சவால்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. ஆண்களால் உயிர்போகும் அளவுக்குத் தாக்கப்பட்டு மீண்டுவந்தார் ரெபேக்கா. பிரிட்டிஷ் ராணுவ வீரர்களால் பாதிக்கப்பட்ட 14 பெண்களுடன் இணைந்து, ‘நாங்கள் வாழ்வதற்கு ஆண்களின் துணை தேவையில்லை’ என்று முழங்கினார். உமொஜா (Umoja) என்ற கிராமத்தை உருவாக்கினர். இந்தப் பழங்குடி இனத்தின் தாய்மொழி ஸ்வஹிலி (Swahili). இந்த மொழியில் ’உமொஜா’ என்றால், ஒற்றுமை என்று அர்த்தம்.
தற்போது, பெண்கள் மற்றும் குழந்தைகள் என 200 பேர் வசிக்கும் இந்தக் கிராமத்துக்குள் நுழைய ஆண்களுக்கு அனுமதியில்லை. இங்கு வாழும் சம்புரு பெண்கள், தங்களின் வாழ்வாதாரத்துக்குப் பாரம்பர்ய நகைகளை உருவாக்கி விற்பனை செய்கிறார்கள். அங்கே வரும் பெண் சுற்றுலாப் பயணிகளுக்குத் தங்கும் வசதி அளித்து, கட்டணம் வசூலிக்கின்றனர். அந்த வருமானத்தில், குழந்தைகளுக்கு ஒரு பள்ளியை உருவாக்கிச் சிறப்பாக நடத்திவருகின்றனர்.
“கல்வி மட்டுமே எங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்று நம்புகிறேன். எங்கள் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க விரும்புகிறோம். பெண்களை மதிக்கும் சமூகமாக அவர்களை உருவாக்குவோம். இந்தப் பள்ளியில் எங்கள் கிராமத்தைச் சுற்றியுள்ள பிற கிராமங்களிலிருந்தும் குழந்தைகள் வந்து படிக்கிறார்கள். நிச்சயம் இவர்களின் வருங்காலம் பிரகாசமாக இருக்கும்” என்று உறுதியுடன் தெரிவிக்கிறார் ரெபேக்கா.
ஆனால், இவர்கள் ஒதுக்கிவைத்து 27 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த இனத்து ஆண்களிடம் பிற்போக்கு எண்ணங்கள் இன்னும் நீங்கியபாடில்லை. “எங்கள் வழக்கபடி சம்புரு பெண்கள் தனியாக வாழக்கூடாது. பெண்கள் மட்டுமே ஒரு கிராமத்தை நடத்தினால், அது பிரச்னையில்தான் முடியும். இது அவர்களுக்குப் புரியவில்லை. அவர்கள் இப்படி வாழ்வதால் எந்த அர்த்தமும் இல்லை” என்று கூறுகிறார்கள்.
இதையெல்லாம் புறந்தள்ளி வெற்றிகரமாக வாழ்ந்துவருகிறார்கள் உமொஜா கிராமத்துப் பெண்கள்.

