சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே நேற்று, முதல் தகுதிச்சுற்று போட்டி நடந்தது. இதில் சென்னை அணி வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. ஐ. பி. எல் 11வது சீசனின் லீக் போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவடைந்தன.
லீக் சுற்று முடிவில் கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் லீக் தொடரில் அதிக வெற்றிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில் இருந்ததன் மூலம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் அணிகளான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையேயான முதல் தகுதிச்சுற்று போட்டி நேற்று நடைபெற்றது.
மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணிக்கு பிராத்வய்ட் 43 ரன்களும், கேன் வில்லியம்சன் மற்றும் யூசுப் பதான் தலா 24 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு ஹைதராபாத் அணி 139 ரன்கள் எடுத்தது.