அட்லாண்டிக் வரலாற்றில் இல்லாத மிகப்பெரிய சூறாவளி இர்மா கரீபியன் தீவான செயிண்ட் மார்டினைப் புரட்டிப் போட்டதில் உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டு அங்கு வன்முறை வெடித்துள்ளது.
இது குறித்த நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைச் செய்தி வருமாறு:
செயிண்ட் மார்டினைச் சேர்ந்த ஜாக் சார்போனியர் என்ற 63 வயது நபர் கூறுகிறார், “அனைத்து உணவுகளும் போய்விட்டன, மீதமிருக்கும் உணவுகளுக்காக மக்கள் தெருக்களில் இறங்கி சண்டையிட்டு வருகின்றனர்” என்றார்.
இர்மாவின் கோரத் தாண்டவத்தில் கரீபியன் தீவுகளில் 24 பேர் கொல்லப்பட்டதோடு, சுமார் 90% கட்டிடங்கள் தரைமட்டமாகின. சில தீவுகளில் சமூக கட்டுக்கோப்பு குலைந்து கொள்ளை, சூறையாடல்கள் நடைபெற்றன.
மின்சாரம், தொலைபேசி சேவைகள் முடங்கின, உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறை தலைவிரித்தாடுவதாக செயிண்ட் மாரின் மக்கள் கூறுகின்றனர்.
பிரான்ஸ் மற்றும் டச்சு அரசுகள் உதவிப்பொருட்களுடன் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட படைகளையும் அனுப்பியுள்ளது.
தீவின் நெதர்லாந்து பகுதியில் கடைகள் சூறையாடப்பட்டு உணவுப்பொருட்கள், பழங்கள், தண்ணீர், மின்சாதன்பொருட்கள் களவாடப்பட்டுள்ளன.
சிலர் ஆடம்பரப் பொருட்களைக் களவாட, வேறு சிலர் பிஸ்கட்டுகள், தண்ணீர் கேன்களைத் திருடிச் சென்றனர்.
இர்மா மட்டுமல்லாது ஜோஸ் என்ற இன்னொரு சூறாவளியும் சனியன்று செயிண்ட் மார்டினை தாக்கிச் சென்றுள்ளது. இர்மா தாக்கத்திலிருந்தே மீளாத மக்களுக்கு உதவிப்பணிகள் செய்ய முடியாமல் ஜோஸ் சூறாவளியும் அடுத்ததாகத் தாக்கியது. இதுவரை 27 பேர் பலியானதாக அதிகாரபூர்வ தகவல்கள் கூறினாலும் பலி எண்ணிக்கை இதைவிடவும் அதிகமே என்று சில தரப்புகள் அறுதியிடுகின்றன.