கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற சச்சின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உற்சாகமாக வலம் வரும் நிலையில் சமூக விழிப்புணர்வு செயல்பாட்டிலும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவுடன் வெளியிட்டுள்ள செய்தியில், “வாகனம் ஓட்டுபவராக இருந்தாலும் பின்னால் அமருபவராக இருந்தாலும் இருவரது உயிருக்கும் பாதுகாப்பு அவசியம். இருவரும் ஹெல்மெட் அணிவதை ஒரு பழக்கமாக மாற்றிக் கொள்ளுங்கள் பிளீஸ்” என்று டிவீட் செய்துள்ளார்.
அந்த வீடியோவில், காரில் பயணம் செய்து கொண்டிருந்த சச்சின், கார் ஜன்னலைத் திறந்து சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டிக் கொண்டிருந்த ஒருவரை நோக்கியும் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணிடமும் ஹெல்மெட் அணியுங்கள் என்று அறிவுறுத்தினார்.
அப்போது சச்சினைப் பார்த்த மகிழ்ச்சியில் இன்னொரு வாகன ஓட்டி அவரிடம் பேச்சுக் கொடுத்தார், அவருக்கு நன்றி தெரிவித்து முன்னே நகருங்கள், பின்னால் வருபவருக்கு நான் ஒரு செய்தி கூறியாக வேண்டும் என்று தெரிவித்து அவரை நகரச்சொன்னார், அப்போது பெண் ஒருவர் பின்னிருக்கையில் அமர இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம், இருவரும் ஹெல்மெட் அணியுங்கள் என்றார்.
மேலும் வாகன ஓட்டி மட்டுமே ஏன் ஹெல்மெட் அணிய வேண்டும் பின்னால் அமருபவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.