ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியில், இந்தியாவின் மீராபாய் சாய்கோம் சானு, பெண்களுக்கான பளு தூக்கும் பிரிவில் தங்கம் வென்றிருக்கிறார்.
21 வது காமன்வெல்த் போட்டிகள், ஆஸ்திரேலியாவின் கோல் கோஸ்ட் நகரில் நேற்று கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கின. 11 நாள்கள் நடக்கும் இந்தக் காமன்வெல்த் போட்டிகளில், மொத்தம் 71 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இன்று காலை நடந்த ஆண்களுக்கான பளுதூக்குதலில், 56 கிலோ பிரிவில் இந்தியாவின் குருராஜ் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்க வேட்டையைத் தொடங்கிவைத்தார்.
பெண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சாய்கோம் சானு களமிறங்கி பெண்கள் சார்பாக முதல் தங்கத்தைப் பெற்றுத்தந்தார். முதலில் 80 கிலோ, 84 கிலோ மற்றும் 86 கிலோ எனத் தொடர்ச்சியாக தூக்கி அரங்கத்தை அதிரவைத்தார். பின்னர் அவரது எடையை விட அதிகமான 103 கிலோ, 107 கிலோ மற்றும் 110 கிலோ என `கிளின் அண்ட் ஜெர்க்’ பிரிவிலும் வெளுத்துக்கட்டினார். இதன்மூலம் இந்த விளையாட்டின் ஒட்டுமொத்த சாதனைகளையும் அவர் முறியடித்தார்.