ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் 27ம் தேதி தொடங்குகிறது.
பொதுவாக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்திய துணை கண்ட மைதானங்களில் ஆஸ்திரேலியா தடுமாறும். அத்துடன் டெஸ்ட் போட்டிகளில் வங்கதேச அணியின் சமீபத்திய சிறப்பான செயல்பாடுகளும் இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இது குறித்து வங்கதேச அணியின் தொடக்க வீரர் தமீம் இக்பால் கூறுகையில், ‘’சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஆடுகளங்கள் உதவி செய்தால், அவர்களால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும்.
ஆனால் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை உருவாக்குவதன் மூலம் மட்டும் நாங்கள் வெற்றி பெற்று விட முடியாது.
நாதன் லயன் போன்ற சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலிய அணியிலும் உள்ளனர். எனவே ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு உதவி செய்தால், 2 அணிகளும் ரன்களை குவிக்க தடுமாறும் என்பதே உண்மை.
எங்கள் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். இது போன்ற ஆடுகளங்களில் எங்கள் வேகப்பந்து வீச்சாளர்களும் நன்றாக பந்து வீச வேண்டிய தேவை உள்ளது.
வெற்றியை பார்க்க வேண்டும் என விரும்பினால், இந்த அத்தனை விஷயங்களும் ஒன்றாக வேலை செய்ய வேண்டும். போட்டி நடக்கும் 5 நாட்களும் சீசனுக்கு சீசன் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடாவிட்டாலும் எங்களால் வெற்றி பெற முடியாது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட போகிறோம் என்பதால், நம்பிக்கையை இழந்து விட மாட்டோம். ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது சாத்தியமற்றது என நான் நினைக்கவில்லை.
அனைத்து துறைகளில் நன்றாக பயிற்சி பெற்று தயாராகியுள்ளோம்.
எங்களது திட்டங்களை செயல்படுத்த வேண்டிய நேரமிது’’ என்றார்.

