2009 இனப்படுகொலைப் போரின் பின்னர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோற்றமானது புலம்பெயர் தேச மக்களுக்கும் ஈழத்தில் வாழ்கின்ற எம் உறவுகளுக்கும் பெரும் நம்பிக்கையாக இருக்கிறது.
இனப்படுகொலைக்கான நீதி, தமிழீழ விடுதலை என்று பல்வேறு பணிகள் நம் முன்னால் உள்ள நிலையில் உலகமெங்கும் வாழ்கின்ற ஈழத் தமிழ் மக்கள் பல்வேறு கடமைகளை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ளனர்.
இந்த நிலையில் நாடு கடந்த அரசாங்கமானது தமிழீழக் கொடிநாள் என்ற நிகழ்வை கனடாவில் முன்னெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் ஒருபோதும் தமிழீழ விடுதலைப் புலிகள் இப்படியொரு நாளை கொண்டாடவுமில்லை. அறிமுகப்படுத்தவும் இல்லை.
எனவே, புலிகள் இயக்கம் பிரகடனப்படுத்தாத ஒரு நிகழ்வை நாம் முன்னெடுப்பது சரியானதல்ல. அத்துடன் உலகில் எந்தவொரு நாடும் போராட்ட இயக்கமும் இப்படியான நாளைக் கொண்டாடியதுமில்லை.
ஈழத் தமிழ் மக்களின் உரிமைக்காக சளைக்காமல் குரல் கொடுத்து வருகின்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் மாண்புமிகு உருத்திரகுமாரன் அவர்கள் இதனைக் குறித்துக் கரிசனை செலுத்த வேண்டும் என அன்புரிமையுடன் கேட்கிறோம்.
அத்துடன் கனடா போன்ற சில நாடுகளில் நாடுகடந்த தமிழீழ அரசிற்காக ஆளுமையும் தனித்துவமும் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களை சரியாக தெரிவு செய்ய வேண்டிய தேவையும் இருக்கிறது.
இதேவேளை நாடு கடந்த அரசின் கொடிநாள் நிகழ்வு குறித்து புலம்பெயர் தேச ஊடகங்கள் பெரும் அதிருப்தியில் உள்ளன. அத்துடன் இதுபோன்ற நிகழ்வுகளின் போது பல ஊடகங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
எனவே எதிர்வரும் காலத்தில் ஈழத் தமிழ் மக்கள் மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இலட்சியங்களை வெல்லுகிற நிகழ்வுகளை நடாத்துவதுடன் ஊடகங்களை அரவணைத்துச் செல்லவும் வேண்டும் என்பதை அன்புரிமையுடன் உறவுகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
விசேட நிருபர்
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]