தமிழ், தெலுங்கு சினிமாக்களில் எந்தப் படம் எவ்வளவு வசூலித்தது என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் அறிவிக்கப்படுவதே இல்லை. தங்களது படங்களைப் பற்றிய வசூல் விவரங்களை பொய்யாக கூடுதலாக்கி அவற்றை சமூக வலைத்தளங்களில் உள்ள சிலர் மூலம் பரவச் செய்வதை சில தயாரிப்பாளர்கள் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.
அப்படி ஒரு பொய்யான வசூல் தகவல் மூலம் சமீபத்தில் வருமான வரி சோதனை எல்லாம் கூட நடைபெற்றது. இப்படிப்பட்ட பொய் வசூல் விவரங்களைத் தடுக்க ஒரு புதிய நடவடிக்கையை தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கில்டு மேற்கொள்ள உள்ளது.
சமீபத்தில் வெளியான ‘சரிலேரு நீக்கெவரு, அலா வைகுந்தபுரம்லோ’ ஆகிய படங்கள் வசூல் விவரங்களை அளிப்பதில் போட்டி போட்டுக் கொண்டு பொய்த் தகவல்களை அளித்தார்கள். அதைக் கருத்தில் கொண்டு தான் இப்படி ஒரு புதிய நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளார்களாம்.
வரும் கோடை முதல் வெளியாக உள்ள படங்களின் வசூல் விவரங்களை தயாரிப்பாளர் கில்டு வெளியிடப் போகிறதாம். பல்வேறு இடங்களிலிருந்து கிடைக்கும் தகவல்களைப் பொறுத்த ஏறக்குறைய சரியான விவரங்களை அளிக்கப் போகிறார்களாம்.
தமிழ் சினிமாவிலும் இப்படி ஒரு முறையை கொண்டு வந்தால் இங்குள்ள ரசிகர்களின் சண்டைகள் குறையும், டுவிட்டரில் வரும் பொய்த் தகவல்களுக்கு ஒரு முடிவு வரும்.

