பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், அதிவேகமாக ராணுவத்தை பலப்படுத்தும் சீனா, உலகிற்கே அச்சுறுத்தலான நாடு என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
சீனா – அமெரிக்கா இடையே இன்னும் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாததால் இரு நாடுகளும் மாறி மாறி வர்த்தகத்தில் பழிதீர்த்து வருகின்றன. 250 பில்லியன் டாலர் மதிப்பிலான சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்தது.
அதற்கு பழிக்குப்பழியாக 110 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா வரிவிதித்தது. இதுஒருபுறமிருக்க தென் சீனக் கடலில் அமெரிக்கா தலையிடுவதை தடுக்கும் பொருட்டு, ராணுவத்தை பலப்படுத்துவதற்காக 10 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது சீனா.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தங்கள் நாட்டு அறிவுசார் சொத்துக்களைத் திருடி, தனது ராணுவத்தை சீனா பலப்படுத்துவதாகச் சாடினார்.
தனக்கு முன்பு அதிபர்களாக பதவி வகித்தவர்கள், அமெரிக்காவின் அறிவுசார் சொத்துக்களை சீனா திருடுவதை தடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிய டிரம்ப், தங்கள் நாட்டில் இருந்து ஆண்டுக்கு 500 பில்லியன் டாலர்கள் அளவுக்கு பணத்தை சீனா எடுத்துச் செல்வதை முந்தைய அதிபர்கள் தடுக்கவில்லை என்றும் சாடினார். ஆனால் அதுபோன்று நடப்பதை தாம் அனுமதிக்கப் போவதில்லை என்றும் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

