குண்டுத் தாக்குதல்களுக்கு புலனாய்வுப் பிரிவினரை குற்றம் சாட்டுவது எவ்வாறு? எனவும், புலனாய்வுப் பிரிவினரில் அரைவாசிக்கும் அதிகமானோர் இருப்பது சிறையிலேயே எனவும் முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க் கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
குண்டுத் தாக்குதலில் உயிர் நீத்தவர்களுக்காக எதிர்க் கட்சித் தலைமைக் காரியாலயத்தில் நேற்று (22) இடம்பெற்ற பிரார்த்தனை நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
அரசாங்கத்திலுள்ள சில எம்.பி.க்கள் பயங்கரவாதத் தாக்குதலுக்கு புலனாய்வுத் துறையினர் பொறுப்புக் கூற வேண்டும் எனக் குற்றம்சாட்டுவதாகவும் இது குறித்து தங்களது கருத்து என்னவென ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
புலனாய்வுப் பிரிவினரை எவ்வாறு குற்றம்சாட்டுவது? இது தொடர்பில் அவர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். அது மட்டுமல்லாது, புலனாய்வுப் பிரிவிலுள்ள அரைவாசிக்கும் மேற்பட்டோர் சிறைகளிலேயே உள்ளனர்.
புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய அறிக்கையின் பிரகாரம் ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை? என்பதே தற்போதுள்ள பிரச்சினை. இந்த அறிக்கை தொடர்பில் மக்களை அறிவுறுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும். அதனை அரசாங்கம் செய்யவில்லையெனவும் மஹிந்த ராஜபக்ஸ மேலும் விளக்கமளித்தார்.