நாடளாவிய ரீதியில் கடந்த 4 நாட்களுள் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 42 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 13 ஆம் திகதி முதல் நேற்றுக் காலை 6 மணிவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற 31 வாகன விபத்துகளில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த 11 ஆம் திகதி முதல் நேற்றுக்காலை 6 மணியுடன் நிறைவடைந்த காலப்பகுதியினுள், மதுபோதையில் வாகனம் செலுத்திய 1536 பேர் கைதுசெய்யப்பட்டுள்ள அதேவேளை, வீதி விதிகளை மீறியமை தொடர்பில் 42,114 பேருக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், பண்டிகை காலப்பகுதியில் அவதானமாக வாகனம் செலுத்துமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுவந்த போதிலும் இவ்வாறான விபத்துகள் இடம்பெற்றுள்ளமை மிகவும் வருந்தத்தக்கது எனவும், இவை அனைத்தும் தவிர்க்கப்பட்டிருக்க முடியுமான விபத்துக்கள் என விசாரணைகளில் தெளிவாவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை, எதிர்வரும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு வீதிகளில் அதிகளவில் வாகனங்கள் பயணிப்பதால், வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

