தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2010 ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டபோது உள்ள கோரிக்கைகளை – தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு, அரசியல் நிலைப்பாடுகளை – அப்படியே 2013 ஆம் ஆண்டு மாகாணசபைத் தேர்தலுக்கும் அதன் பின்னர் வந்த 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கும் வெளியிட்டனர். அப்படியே அதே கொள்கை கோட்பாடுகள் அதில் உள்ளடக்கப்பட்டன.கொள்கையில் விலகிப்போனது கூட்டமைப்பு என்று விக்னேஸ்வரன் கூறுவதற்கு இந்த விசித்திரமான காரணமே ஆகும்.
2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பற்றி எவரும் பேசவில்லை. அதற்கான அந்தநேர சூழ்நிலை அனைவருக்கும் தெரியும். 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தான் அங்கத்துவம் வகிக்கும் கட்சிக்கு எதிராகச் செயற்பட்டார். அந்த நேரத்தில் அவர் தன்னுடைய கட்சிக்காக வேலைசெய்யவில்லை. மாறாக, வேறு கட்சிகளை சுட்டிக்காட்டினார். என்ற குற்றச்சாட்டை நாம் கொண்டுவந்தபோது அவர் கூறினார், நான் 2015 ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. என்னுடைய மாகாணசபைத் தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தான் நான் ஏற்றுக்கொள்கின்றேன் என்றார்.
அப்பொழுது நான் அவரிடத்தில் இரண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தையும் கொடுத்து இதில் ஏதாவது வித்தியாசம் இருக்கா என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் 2015 ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தை நான் படிக்கவில்லை என்பதே. ஒரே மாதிரியான தேர்தல் விஞ்ஞாபனம் இரண்டை வைத்துக்கொண்டு இதை நான் ஆதரிக்கின்றேன் இதை நான் நிராகரிக்கின்றேன் என்று கூறியவர் நீதியரசர் விக்னேஸ்வரன்.
2017 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் இடைக்கால அறிக்கை வந்தபோதும் அதைத் தான் நிராகரிக்கின்றேன் என்றார். அதன்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அந்த நேரத்தில் ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் ஏன் நிராகரிக்கின்றீர்கள் என்று கேட்டமைக்கு, நான் இன்னமும் படித்துப் பார்க்கவில்லை படித்துப் பார்த்துவிட்டு சொல்கிறேன் – என்றார்

