அரச இசை விருது விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தாமரைத் தடாக அரங்கில் இடம்பெற்றது.
இதனை உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சும், கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
இதில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் முன்னாள் இசைப் பிரிவு பணிப்பாளரும் பிரபல இசைக் கலைஞருமான விசாரத தயாரட்ன ரணதுங்க வாழ்நாள் சாதனையாளர் விருதை வென்றார்.
சிறந்த பாடகர் பிரிவில் சிங்கள மொழியில் துமால் வர்ணகுலசூரியவும், தமிழ் மொழியில் விஜயகுமார் நிரேஷனும் ஜனாதிபதியிடம் இருந்து விருது பெற்றார்கள்.
பாடகியருக்கான பிரிவில் சிங்கள மொழியில் று.பிரியங்கனியும் தமிழ் மொழியில் வி.ரோஷினியும் விருது வென்றார்கள்.
இந்த நிகழ்வில் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவும் கலந்து கொண்டார். இசை என்பது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அம்சம். ஏனைய கலைகளை போஷித்து வளர்க்க சங்கீதம் அத்தியாவசியமானது என அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சிகள் ஊடாக ரசனையை மேம்படுத்தக் கூடிய இசை நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டன.
சமகாலத்தில் பன்பலை வானொலிகள் வியாபித்து நல்ல இசையை செவி மடுக்க முடியாத நிலை தோன்றியுள்ளது.இந்த நிலைமையை மாற்றியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

