சமகால நல்லாட்சி அரசாங்கம் தேசிய கைத்தொழில் துறையை மேம்படுத்துவதுடன் அவற்றை பாதுகாப்பதற்கு பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்கிமசிங்க தெரிவித்தார்.தேசிய கைத்தொழிலை அழிப்பதாக சிலர் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை மறுத்த பிரதமர் தேசிய கைத்தொழில்துறையை பலப்படுத்தி சர்வதேச சந்தைக்கு தேசிய கைத்தொழில்துறையை முன்னெடுப்பதே நோக்கம் என்றும் கூறினார்.
அத்துடன் தேசிய கைத்தொழிலாளர்களுக்கு இயந்திராதிகள், உபகரணங்கள் இறக்குமதி செய்யும் போதும் அறவிடப்படும் ‘வற் வரியை நீக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மில்லெனிய, பண்டாரகம என்ற இடத்தில் உஸ்வத்த கோல்டன் பிஸ்கட் தொழிற்சாலையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பிரதமர் உரையாற்றினார்.
புதிய கைத்தொழில் துறையைச்சார்ந்தோருக்கு வரி நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்படும். அவர்களுக்கு தேவையான உபகரணங்களை வெளிநாட்டிலிருந்து இலங்கைக்குள் கொண்டுவரும்போதும் அதற்காக அறவிடப்படும் ‘வற்’ வரியை நீக்குவதற்கும் தீர்மானித்துள்ளோம் என்றும் பிரதமர் இங்கு சுட்டிக்காட்டினார்.
அபிவிருத்தி திட்டங்களுக்காக நிதி பெற்றுக்கொடுக்க கூடிய நிறுவனமொன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். முன்னர் நாம் இவ்வாறான நிதியை DFCC ; NDB அரசு பெற்றுகொண்டது. இருப்பினும் கடந்த கால ஆட்சியின் போது அவை தனியார் மயப்படுத்தப்பட்டன. எனவே நாம் இவ்வருடம் அபிவிருத்தி வங்கி வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க எதிர்பார்த்திருக்கின்றோம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
இத்துறையை மேம்படுத்துவதற்கு எத்தகைய நிவாரணங்களை, வசதிகளை பெற்றுக்கொடுக்கலாம் என்பது தொடர்பாகவும் நாம் பேச்சு நடத்திவருகின்றோம். இதேபோன்று ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணங்கள் பெற்றுக் கொடுக்கின்றோம். அதேபோன்று கடனுக்கான வட்டி அறவீடுகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க தேவையான பேச்சுவார்த்தையை நடத்திவருகின்றோம்.
தேசிய உற்பத்திகளின் ஒரு பகுதியை ஏற்றுமதி செய்வதற்கும் ஒரு பகுதியை உள்நாட்டு சந்தைக்கு வழங்கவும் நாம் நடவடிக்கை எடுத்துவருகின்றோம்.
2050ஆம் ஆண்டாகும்போது நாட்டின் சனத்தொகை மேலும் அதிகரிக்கும். நாம் தூரநோக்குடன் சிந்தித்து எதிர்காலத்தை கருத்தில்கொண்டே செயற்படுகிறோம். அதிக இலாபத்தை நோக்காகக் கொண்டு இலங்கைக்கு தருவிக்கப்படும் பொருட்களை நிறுத்தவும் தேவையான சட்டங்களை தயாரித்து வருகின்றோம் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறினார்.












