தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னரே விடுதலை புலிகளின் முக்கிய தளபதிகளை இலக்கு வைத்து இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினார்கள் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த யாழ். மாநகர சபை உறுப்பினர் எம்.ரெமிடியஸ் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் வெள்ளிக்கிழமை இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “இறுதி யுத்தம் வரை சென்று வந்தவன் என கூறிக்கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் யுத்தம் இடம்பெற்றுக்கொண்டு இருக்கும் போதே இராணுவத்தினரிடம் சரணடைந்து இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்துவிட்டார்.
அவர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னரே ஆனந்தபுரத்தில் இராணுவ சுற்றிவளைப்புத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் தீபன் உள்ளிட்ட பல தளபதிகள் மரணித்தனர்.
எமது கொள்கை எப்போதுமே வடக்கு கிழக்கு ஒன்றிணைந்த மாநிலமாகும். தமிழ் தேசியம் பற்றிக் கூறுகின்ற பலர், யுத்தம் முடிவடைவதற்கு முன்னர் எவ்வாறு தமிழ் தேசியம் கூறினார்கள், தற்போது எவ்வாறு கூறுகின்றார்கள் என்பது புலனாகிறது” எனத் தெரிவித்தார்.