பிரிவினைவாத குர்திஸ்தான் பிராந்தியத்தில் இலங்கைக்கான தூதரக அலுவலகமொன்றை அமைக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தகவலை குர்திஸ்தான் பிரிவினைவாத குழுவின் பேச்சாளர் ஒருவர் உறுதி செய்துள்ளதாகவும் சகோதர சிங்கள ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நாட்டிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று தொழிலாளர்களை அந்நாட்டுக்கு அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குர்திஸ்தான் என்பது குர்தி மொழி பேசும் குருது மக்களின் மரபுவழித் தாயகப் பிரதேசத்தைக் குறிக்கின்றது. இந்த நிலப்பகுதி துருக்கி, ஈராக், ஈரான், சிரியா, ஆர்மேனியா ஆகிய நாடுகளின் பகுதிகளில் இருக்கிறது. இந்த பகுதிகள் எல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டு குர்திஸ்தான் உருவாக்கப்படவேண்டும் என்பது குர்து மக்களின் வேண்டுகோள் ஆகும். இதற்காக வேண்டி அவர்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.
இன்றைய குர்திஸ்தான் குர்து மக்கள் அதிகம் வாழும் துருக்கியின் கிழக்கு (துருக்கிய குர்திஸ்தான்) எனவும், ஈராக்கின் வடக்குப் பகுதி (ஈராக்கிய குர்திஸ்தான்) எனவும், ஈரானின் வடமேற்குப் பகுதி (ஈரானிய குர்திஸ்தான்) எனவும் அழைக்கப்படுகின்றது. சிரியாவின் வடக்குப் பகுதியையும் இப்பிராந்தியம் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.