டி.டி.வி. தினகரனை ஜெயலலிதாவின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது என்று சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறியுள்ளார். திருச்சி மாவட்டம் முசிறி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செல்வராசு இல்லத் திருமண விழா இன்று நடைபெற்றது. அந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ‘ மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நீக்கும் அதிகாரம் டி.டி.வி. தினகரனுக்கு இல்லை. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அவர் கட்சியில் எப்படி இணைந்தார்?. ஜெயலலிதாவின் ஆன்மா அவரை சும்மாவிடாது. ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லக்கூட அவருக்கு அருகதை கிடையாது. அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்க வேண்டியதுதான் பாக்கி. ஆர்.கே.நகர் தேர்தலில் சசிகலா படத்தைப் புறக்கணித்த தினகரன், இன்று பதவி ஆசைக்காக சசிகலா குறித்து பேசிவருகிறார். அவர் தவறான வழியில் பயணித்துக் கொண்டிருக்கிறார். முதலமைச்சர் பழனிசாமி எதையும் சமாளிக்கும் திறமை கொண்டவர். முடிந்தால் என்னை திருச்சி மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து டி.டி.வி. தினகரன் நீக்கட்டும்’ என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.