இலங்கை அரசியலில் இரு குடும்பங்கள் ஆட்சி அதிகாரங்களில் கோலோச்சிவரும் ஒரு சூழல் உருவாகியுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் அவரின் குடும்ப உறுப்பினர்கள் ஆட்சி அதிகாரத்தில் செல்வாக்குச் செலுத்தியிருந்தனர். குறிப்பாக சகோதரர்கள், மற்றும் பிள்ளைகள், உறவினர்கள் என்று அனைவரும் முக்கியமான அரசு பொறுப்புக்களில் இருந்தனர்.
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும், பாதுகாப்பு, நிதி, முப்படைத் தளபதியாகவும் இருக்க, நிதியமைச்சராக பசில் ராஜபக்சவும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோத்தபாய ராஜபக்சவும், சமல் ராஜபக்ச சபாநாயகராகவும், நாமல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், யோசித கடற்படையிலும் இருந்தனர்.
இதனால் மகிந்த ராஜபக்சவின் ஆட்சி மீது, சர்வதேசத்தில் மாத்திரமன்றி உள்நாட்டிலும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
மகிந்த ஆட்சியினை வீழ்த்தவும் இந்த குடும்ப ஆட்சி என்னும் கோசம் மிக எளிமையாகவும், பக்கபலமாகவும் மைத்திரி, ரணில் தரப்பினருக்கு வாய்ப்பாகியது.
ஆனால், மைத்திரிபால சிறிசேன ஆட்சியில் குடும்ப ஆட்சி இருக்காது என்றும், ஜனநாயகத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் எதிர் பார்க்கப்பட்டது. ஆயினும் ஆட்சி ஏற்று சிறிது காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சதுரிக்கா சிறிசேன அரசியல் பிரவேசம் குறித்து பேசப்பட்டதுடன், ஜனாதிபதி பங்குபற்றும் நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார்.
ஜனாதிபதி பங்குபற்ற முடியாத நிகழ்வுகளில் கூட அவர் கலந்து கொண்டார். இதேவேளை ஜனாதிபதியின் மகன் தஹம் சிறிசேனவும் அரசியலில் ஈடுபாடு காட்டியிருந்தார். இதற்கு ஒரு படிமேல் சென்று ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் நிகழ்வுகளில் கூட ஜனாதிபதியோடு கலந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில். இந்தச் செயற்பாடுகள் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. மகிந்தவின் ஆட்சியை மைத்திரி தொடர்கின்றார் என்றும், குடும்ப ஆட்சி மீண்டும் நல்லாட்சியிலும் தலை தூக்கியிருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
இந்த நிலையில், குடும்ப ஆட்சி என்னும் பெயர் கொண்டு வீழ்த்தப்பட்ட மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சியையும், இழந்த மக்கள் செல்வாக்கையும் பெறுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.
குறிப்பாக கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்திப்பதும், விகாரைகளுக்கு அடிக்கடிச் சென்று வழிபாடுகளிலும் ஈடுபட்டு வர, அவரின் புதல்வர்கள் மூவரும் மக்களோடு மக்களாக களத்தில் இறங்கி வேலை செய்தனர். அடுத்த தேர்தலை இலக்காகக் கொண்டு செயற்படுகின்றார்கள் என்றும் விமர்சிக்கப்பட்டது.
இந்தச் சூழலில் அண்மையில் பெய்த கடும் மழையும், தென்னிலங்கையின் 12 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி 7 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளதோடு, 224 பேர் உயிரிழந்துள்ளனர்.
வரலாறு காணாத கனமழையினால் தென்னிலங்கையின் 12 மாவட்டங்கள் வெள்ளக்காடாகியது. மக்களின் இயல்பு வாழ்க்கை மீளத் திரும்புவதற்கு பல்வேறு நாடுகளும் உதவி செய்து கொண்டிருக்கின்றன.
இதற்கிடையில் மகிந்த ராஜபக்ச உட்பட, அவரின் புதல்வர்களாகிய நாமல். யோசித ரோகித, மனைவி சிரந்தி ராஜபக்ச உட்பட அனைவரும் களத்தில் இறங்கினர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள், நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்த்தனர். இது குறித்ததான புகைப்படங்கள், காணொளிகள் என்பன வெளிவந்திருந்தன.
அதேபோன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளும், மகனும் களத்தில் இறங்கி பணியாற்றினர். இது மக்களுக்கு உதவும் ஒரு நோக்கம் என்றாலும், இதிலும் அரசியல் இருக்கிறது என்றும், ஆட்சியையும், அதிகாரத்தையும் மக்கள் செல்வாக்கினையும் பெறுவதற்காக குடும்பமாக தலைவர்கள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள் என்று அரசியல் தரப்பினர் கருதுகின்றனர்.
எதுவாயினும், இலங்கை அரசியலில் இரு குடும்பங்கள் தனித்துச் செயற்படத் தொடங்கியிருக்கிறதா என்கிற கேள்வி எழுந்துள்ளதாக அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.