பிரித்தானியாவில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் காரை பொலிசார் கண்டுபிடித்துள்ளதால், விசாரணைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியில் கடந்த மாதம் 22-ஆம் திகதி பிரபல பாப் பாடகி ஏரியனா கிராண்டேயின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த அரங்கில் தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் பலியாகினர். 58-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
லிபியாவில் இருந்து அகதியாக இங்கிலாந்து வந்த 22 வயதான சல்மான் அபேதி என்பவர் இத்தாக்குதலில் ஈடுபட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மான்செஸ்டர் நகரின் டெவெல் கோர்ட் பகுதியில் இன்று ஒரு வெள்ளை நிற கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் டெவெல் கோர்ட் பகுதிக்கு பொலிஸ் அதிகாரிகள் வந்தபோது, காரை கண்டுபிடித்துள்ளனர்.
அந்த கார் வெள்ளை நிற நிஷான் கார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் விசாரணைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கடந்த காலங்களில் அந்த காரில் சென்று வந்தது யார் என்பது தொடர்பான தகவல்களை பொதுமக்களிடம் இருந்து பெறுவதற்கு ஆர்வமாக இருப்பதாக துப்பறியும் தலைமை கண்காணிப்பாளர் ரஸ் ஜாக்சன் தெரிவித்தார்.
அபேதியின் உறவினர்கள் இருவரை கைது செய்து விசாரிக்கையில், அபேதி தனித்து செயல்பட்டதாகவும், எந்த தீவிரவாத அமைப்புடனும் அவருக்கு தொடர்பு இருக்காது என்றும் கூறியுள்ளனர். எனவே, அந்த காரில் அபேதி வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.