சென்னை தியாகராஜ நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் இன்று அதிகாலை முதல் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.
இந்த தீ விபத்தால் இந்த கட்டிடம் முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது. கீழ் தளத்தில் பற்றிய தீ படிப்படியாக மேல் தளங்களுக்கும் பரவியது.
இதனால் 7 மணி நேரமாக கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.
கட்டிடம் முழுவதும் புகையாக இருப்பதால் எங்கு தீ பற்றியுள்ளது என்பது தெரியவில்லை
எனவே, கட்டிடத்தின் வெளிப்புற கண்ணாடிகளை உடைத்து புகையை வெளியே கொண்டு வரும் முயற்சியில் தற்போது தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தீ விபத்து காரணமாக, இந்த பகுதி அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் அருகிலிருக்கும் கடைகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
மேலும், அருகிலிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், கட்டிடத்தில் இருந்த சில ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து தீ எரிவதால், அந்த கட்டிட்டத்தின் வெளிப்புற சுவரில் விரிசல் ஏற்பட்டு வருகிறது.
எனவே, இந்த கட்டிடம் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அதன் அருகில் வசிக்கும் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் ஜெனரேட்டரில் ஏற்பட்ட மின் கசிவால் அருகில் இருந்த டீசல் கேன் வெடித்து தீ பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது.
தீ விபத்தால் சென்னை சில்க்ஸ் கடையின் இரண்டாவது மாடியில் சுவர் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் கட்டடத்தின் உள்ளே தீ பயங்கரமாக எரிவதால், கட்டடத்தின் உட்புற சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன.
வெளிப்புறச் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டடம் இடிந்து விழும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
கடையில் இருந்த தொன் கணக்கிலான துணிகள் எரிந்து சாம்பலாகியுள்ளது.
தரைத்தளத்தில் உள்ள நகைக்கடையில் ஏராளமான தங்க நகைகள் தீவிபத்தால் சேதமாகியுள்ளது.
6 தளங்களில் வைக்கப்பட்டு இருந்த ஆடைகள், வீட்டு உபயோக பொருட்கள் தீவிபத்தில் நாசமாகியுள்ளது.
மேலும் காலணிகள், கைப்பைகள், அலங்கார பொருட்கள் என அனைத்தும் தீயில் கருகியுள்ளன.
இந்த விபத்தால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமானதால் துணிக்கடை அதிபர்கள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர்.
போலீஸ் கட்டுப்பாட்டில் துணிக்கடை முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
சென்னை சில்க்ஸ் ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அந்தப் பகுதியில் உள்ள ஜி.ஆர்.டி. நகைக் கடை, நல்லி சில்க்ஸ், சரவணா ஸ்டோர்ஸ், ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் என்று நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய கடைகள் மூடப்பட்டுள்ளன.
வணிகம் பாதிப்பு 7 மணி நேரமாக தீ எரிந்து வருவதால் வெளியேறும் கரும் புகையால் தி.நகர் மக்களுக்கு மூச்சுத் திணறல், சுவாசப் பிரச்சனை, நெஞ்செரிச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
250 நடைபாதைக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் சிறு வியாபாரிகள் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது.