ஜேர்மனியில் புகலிடம் கோரிக்கையாளர் ஒருவர் 50 யூரோ விவகாரத்தில் சக அகதியை பார்வை பறிபோகும் வகையில் கொடூரமாக தாக்கி உருச்சிதைத்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் வசித்து வருபவர் 20 வயதான அகதி இளைஞர் தாவிட். இவர் மீது குறித்த சம்பவம் தொடர்பாக கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறி வழக்கு பதிந்துள்ளனர்.
கொலை முயற்சியில் ஈடுபட்டதாக வழக்கு பதியப்பட்டுள்ள தாவிட்டின் நண்பரே பாதிக்கப்பட்ட நபர். 18 வயதான முஸ்தபா என்ற அந்த இளைஞர் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் தாவிட்டுடன் நட்பாக பழகி வந்துள்ளார்.
இந்த நிலையில் 50 யூரோ கடனாக பெற்று திருப்பி தர முடியாமல் போனதால், முஸ்தபா தங்கியிருந்த குடியிருப்புக்கே சென்று பணம் கேட்டு தாவிட் சண்டையிட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே தாவிட் திடீரென்று மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது நண்பர் முஸ்தபாவின் கழுத்தில் தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்த முஸ்தபா சுய நினைவை இழந்து சரிந்துள்ளார்.
இருப்பினும் ஆத்திரம் அடங்காத தாவிட் முஸ்தபாவின் கண்களை பேனா ஒன்றினால் தாக்கியுள்ளார். மட்டுமின்றி காதிரண்டையும் கடித்து துப்பியுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
முஸ்தபாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். இதனால் குறித்த இளைஞர் உயிர் பிழைத்துள்ளார்.
ஆனால் இனி உள்ள காலம் முழுவதும் பார்வை இழந்து ஊனமுற்றவராக வாழ வேண்டிய நிலையில் சோமாலியரான அந்த இளைஞர் தள்ளப்பட்டுள்ளார்.