இறுதிக்கட்ட போரின் போது அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான 48 மணி நேர போர் நிறுத்த உடன்படிக்கைக்கு தான் உடன்படவில்லை என முன்னாள் இராணுவ தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பொரளையில் இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே சரத் பொன்செகா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
2009ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி 48 மணி போர் நிறுத்தத்தை அறிவித்தார். பொது மக்கள் தமிழ், சிங்கள புத்தாண்டை கொண்டாட வேண்டும் என தெரிவித்து போர் நிறுத்த உடன்படிக்கை அறிவிக்கப்பட்டது.
எனினும், அந்த காலக்கட்டத்தில் இராணுவ தளபதியாக செயற்பட்ட தாம் அப்போதைய அரசாங்கத்தை போர் நிறுத்தத்திற்கு செல்ல வேண்டாம் என வலியுறுத்தியிருந்தேன்.
போர் நிறுத்தம் காரணமாக, பெரும் எண்ணிக்கையிலான இராணுவத்தினரை இழந்து விட்டதாகவும் சரத் பொன்சேகா இதன் போது தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், 2009ம் ஆண்டு மே மாதம் நடுப்பகுதியில் விடுதலைப் புலிகளை இராணுவம் தோற்கடித்திருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மஹிந்தவை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும் : பொன்சேகா ஆதங்கம்
கடந்த 2005 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெறும் நோக்குடன் மஹிந்த ராஜபக்ஸ புலிகளுக்கு 2 மில்லியன் ரூபா பணம் வழங்கியதாகவும், இதற்காக அவரை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும் எனவும் அமைச்சரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (01) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதேவேளை, 2005 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்தபோது மீதெட்டமுல்ல குப்பை மேடு 15 உயரத்தில் காணப்பட்டதாகவும், ஆட்சியை தற்போதைய அரசிடம் அவர் கையளித்தபோது, அந்த குப்பை மேட்டின் உயரம் 45 மீற்றராக காணப்பட்டதாகவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தற்போதைய அரசின் ஆட்சியில் 3 மீற்றர்களுக்கு மட்டுமே மீதெட்டமுல்ல குப்பை மேடு உயர்ந்ததாகவும் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.
மீதெட்டமுல்ல குப்பை மேடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாவம் என்றும், அதனை தற்போதைய அரசின் மீது சுமத்த முயற்சிக்க வேண்டாம் எனக் கோரிக்கை விடுப்பதாகவும் பொன்சேகா கூறியுள்ளார்.
தொழிலாளர்களின் வயிற்றில் அடித்ததே மஹிந்தவின் சாதனை : போட்டுத்தாக்குகிறார் பொன்சேகா!
ஆசியாவின் ஆச்சரியம் என்று கூறித் தொழிலாளர்களின் வயிற்றில் அடித்ததே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சாதனையாகும் என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
எமது நாட்டின் பொருளாதாரத்தின் 80வீதம் தொழிலாளர்களின் உழைப்பில்தான் தங்கியுள்ளது.
எமது நாட்டின் தொழிலாளர் வர்க்கம்தான் உலகங்கெங்கிலும் இருந்து அந்நியச் செலவாணியைப் பெற்றுக்கொடுக்கின்றனர்.
வினைத்திறனற்ற செயற்பாடுகளால் கடந்த அரசால் தொழிலாளர்களுக்கான ஒரு சிறந்த தேசிய வேலைத்திட்டத்தை உருவாக்க முடியாது போனது.
தற்போதைய தொழில் அமைச்சர், கோட்டாபய ராஜபக்ஷ போல் செயற்படாது தொழிலாளர்களுக்கான தேசிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.
எமது நாட்டில் பல்வேறு தொழில்களின் அடிப்படையில்தான் பொருளாதார அபிவிருத்தியும் நோக்கங்களும் நிறைவேற்றிக்கொள்ளப்படுகின்றன.
ஆனால், வினைத்திறனற்ற செயற்பாடுகளால் அவை வீழ்ச்சியடைந்தன. இதனால் பாதிக்கப்பட்டது ராஜபக்ஷாக்கள் அல்லர்.
வேலைசெய்யும் மக்களின் பொருளாதரமே வீழ்ச்சியடைந்தது. ஆசியாவின் ஆச்சரியமாக இந்த நாட்டை மாற்றுவோம் என்று கூறி மக்களின் கையில் ஒருசதம் கூட இல்லாம் செய்தமையே ராஜபக்ஷாக்களின் பொருளாதார இலக்குகளாக இருந்தன.
2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி இந்த நாட்டில் ஜனநாயகத்தை மீண்டும் கொண்டு வந்தோம். மீண்டும் மக்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்க அனுமதியளிக்கமாட்டோம்.
நாட்டை ஆட்சிசெய்ய முடியாவிடின் எங்களிடம் ஒப்படைக்கும்படி ராஜபக்ஷ கேட்கிறார்.
அவரின் ஆட்சியின் கேவலம் இந்த நாட்டு மக்களுக்குத் தெரியாதா? மக்கள் இனிமேல் அவரின் ஆட்சிக்கு இடமளிக்கமாட்டார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.