அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மற்றும் போர் கப்பல் போன்றவைகள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பான மாதிரி வீடியோவை வடகொரியா வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியா உலக நாடுகளை அச்சுறுத்தும் விதத்தில் தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. இது தங்களுடைய பாதுகாப்புக்காக செய்யப்பட்டு வருவதாக விளக்கமளித்து வருகிறது.
அணு ஆயுத போர் வெடிக்கும் என்றால் அனைத்து எதிரிகள் படையையும் அழிக்கப்படும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்திருந்தது.
ஆனால் அமெரிக்காவோ வட கொரியா மேற்கொள்ளும் அணு ஆயுத சோதனையை நிறுத்துவதே எங்கள் நோக்கம் என்றும் உலகப்போருக்கு நாங்கள் வழிவகுக்கவில்லை என்று அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் வடகொரிய இன்று ஒரு மாதிரி வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் அண்மையில் அமெரிக்காவின் யுஎஸ்எஸ் மிச்சிகன் நீர்மூழ்கி கப்பலை கொரிய திபகற்பத்திற்கு அனுப்பியது.
தற்போது அவ்வாறு வந்த அந்த நீர் மூழ்கி கப்பல் மீது தாக்குதல் நடத்துவது போன்றும், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்துவது போன்றும், இதனால் வெள்ளை மாளிகை வெடித்துச் சிதறுவது போன்றும் மாதிரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
சுமார் 2.5 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் சில அனிமேஷன்களும் மற்றும் கடந்த பிப்ரவரி மாதம் வடகொரியா மேற்கொண்ட ஏவுகணை சோதனை தொடர்பான வீடியோவும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.
வீடியோவின் முடிவில் அமெரிக்காவின் கொடி எரிவது போன்றும் இடம்பெற்றுள்ளது.
மேலும் அந்த வீடியோவில் பேசும் பெண் ஒருவர் வடகொரியா மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்தால், அவர்கள் தான் அழிவை சந்திப்பார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதே போன்று கடந்த 2013 ஆம் ஆண்டு அமெரிக்காவின் முக்கிய பகுதிகளான வாஷிங்டன் மற்றும் நியூயார்க் மீது தாக்குதல் நடத்துவது போன்ற மாதிரி வீடியோவை வடகொரியா வெளியிட்டிருந்ததாக கூறப்படுகிறது.