இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் ஆணையத்திற்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ள தினகரன் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட காரணம் வெளியாகியுள்ளது.
தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி பொலிசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்த நிலையில், விசாரணைக்காக டிடிவி தினகரனை டெல்லி பொலிஸ், சென்னைக்கு அழைத்து வந்துள்ளது. கொச்சி மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு தினகரனை அழைத்துச் சென்று விசாரணை நடத்த டெல்லி பொலிஸ் திட்டமிட்டு உள்ளனர்.
ரூ.10 கோடி பணம் எங்கிருந்து, யார்–யார் கைமாறி, எந்த வழியாக டெல்லிக்கு அனுப்பப்பட்டது? என்பதை நேரடியாக அறிந்து கொள்ளும் விதமாக பொலிசார் மேற்கண்ட இடங்களுக்கு அவர்களை அழைத்துச் சென்று விசாரிக்க இருக்கிறார்களாம்.
இதேபோல் தினகரன் நண்பர் மல்லிகார்ஜூனாவின் வீட்டில் சோதனை போடவும் அனுமதி பெற்று இருக்கிறார்கள்.
டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட டி.டி.வி. தினகரனை பெசன்ட் நகரில் உள்ள ராஜாஜி பவனில் வைத்து விசாரணை நடத்தினர்.
பின்னர் அடையாறில் உள்ள அவரது வீட்டிற்கு அவரை அழைத்துச் சென்ற பொலிசார், அங்கு வைத்து விசாரணை மேற்கொண்டனர்.