Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தமிழ் மக்கள் பேரவை இணைத்தலைவர் விக்னேஸ்வரனின் உரை

April 25, 2017
in News
0
தமிழ் மக்கள் பேரவை இணைத்தலைவர் விக்னேஸ்வரனின் உரை

எம்மை அடிமைப்படுத்தும் விதத்தில் சிங்கள மக்கள் நடந்து கொண்டால் நாம் அடிபணிய வேண்டும் அல்லது போராட வேண்டும். எமது பாரம்பரியம் போராடுவதை ஒரு பொருட்டாக கருதவில்லை. ஆனால் அடிபணிய வைப்பதை எம்மக்கள் விரும்ப மாட்டார்கள் என தமிழ் மக்கள் பேரவை இணைத்தலைவரும், வடமாகாண முதலமைச்சருமான சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நேற்று(23) நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவை நிர்வாகசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் இதன் போது தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

கிழக்கில் சந்தித்தாலும் கிழக்கின் அதிகாரபீடம் அமைந்திருக்கும் திருமலையில் சந்திக்கவில்லையே என்ற குறையை இன்று நிவர்த்தி செய்துள்ளோம்.

வடகிழக்கு மாகாணமெங்கிலும் இருந்து வந்திருக்கின்ற எமது பிரதிநிதிகளாகிய உங்கள் ஒவ்வொருவருக்கும் எமது மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவிக்கின்றோம்.

எமது இயக்கம் ஒருமக்கள் இயக்கம். மக்கள் மனமறிந்த இயக்கம். மயக்கம் எதுவுமின்றி மக்களுக்கு வேண்டியதை வெளிப்படையாக பேசிவருகின்ற ஒரு இயக்கம். எம்முள் பல மதத்தலைவர்கள் உள்ளார்கள், பல தொழில்களைப் புரிபவர்களின் பிரதிநிதிகள் உள்ளார்கள்.

பல கட்சிகளின் தலைவர்கள் பிரதிநிதிகளாக உள்ளார்கள். இவர்கள் அனைவரும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்தும் கொழும்பில் இருந்தும் நாட்டின் ஏனைய இடங்களில் இருந்தும் வந்து சேர்ந்துள்ளார்கள்.

தமிழ் மக்களின் இன்றைய நிலை அறிந்து அவர்களின் விமோசனத்திற்கு எதைச் செய்யலாம் என்று ஆராய்ந்தறிய இன்று நாமெல்லாம் கூடியுள்ளோம்.

இதுவரை காலமும் எமது சொற்ப கால வாழ்க்கையில் பலதைச் சாதித்துவிட்டோம் என்ற திருப்தி எமக்குண்டு. முதலில் காலக்கெடு வைத்து அவசர அவசரமாக அரசியல் தீர்வொன்றுக்கான அடித்தளத்தினை மக்கள் கலந்துரையாடல் மூலமாக ஆக்கி அம்பலப்படுத்தினோம். அரசாங்கத்திடமும் ஆராயுமாறு கையளித்தோம்.

பின்னர் யாழ் மண்ணில் எதிர்பார்ப்பு எதிர்வு கூறும் விதத்தில் மக்கள் பேரணியை எழுக தமிழ் என்ற நாமத்தில் எழுச்சிமிக்க கூட்டமொன்றை நடாத்தினோம்.

அதே போல் மட்டக்களப்பு மண்ணிலும் மக்களை ஒன்றிணைத்து மதிப்பான எழுக தமிழ் பேரணி ஒன்றை நடாத்தினோம். இவற்றை பலரும் பல விதமாக சித்திரித்திருந்தாலும் அவற்றின் பயன் ஆக்கபூர்வமாக அமைந்திருந்துள்ளது என்பதில் எமக்கு மனமகிழ்ச்சியே.

எமது தமிழ் மக்கட் சகோதரர்களும், சிங்கள சகோதரர்களும் வெளிநாட்டு உறவினர்களும் அந்நாடுகளின் அரசாங்கப் பிரதிநிதிகளும் ஏன் இந்த எழுக தமிழ் என்று மூக்கின் மேல் கைவைக்குமளவிற்கு மக்களின் பேராதரவைப் பெற்றிருந்தன.

எமது உறுப்பினர்கள், பிரதிநிதிகள், மதத்தலைவர்களின் அயராத உழைப்பே அந்த வெற்றியை ஈட்டித்தந்தது என்று கூறுவதில் பெருமிதம் அடைகின்றேன்.

தற்போதும் எமது குழுக்கள் பல மக்கள் மத்தியில் விழிப்பை உண்டாக்கி பொருளாதாரம், கலை, கலாசாரம் போன்ற விடயங்கள் பற்றி அலசி ஆராய்ந்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில் தான் நாம் எல்லோரும் தங்குமிடம் ஒன்றில் கூடியுள்ளோம். அடுத்து நாம் செய்யவேண்டியது என்ன, எப்படி, எவ்வாறு அதனைச் செய்யவேண்டும் யாவரை நாம் சிந்திக்க வைக்கவேண்டும் என்ற பல கேள்விகளுக்கு விடை காணவே இங்கு கூடியுள்ளோம்.

இதுவரையான எமது பயணங்களை பட்டியல் இட்டால் – நாம் கட்சி கடந்து, தேர்தல் தேர்வு கடந்து, மாகாண வரையறைகளைக் கடந்து மக்களை எம்பால் ஈர்த்துள்ளோம் என்பது புலனாகின்றது.

இவற்றிற்கு எமது புலம் கடந்த மக்களும் கடினமாக உழைத்துள்ளார்கள் என்பதும் எமது பலமே. அடுத்தது என்ன செய்யவேண்டும் என இங்கு பலரும் பல கருத்துக்களை கூற உள்ளார்கள். அவற்றை இன்று நாம் கலந்தாலோசிப்போம்.

எமது நடவடிக்கைகள் எவ்வாறான மேலார்ந்த கரிசனைகளை கவனத்தில் எடுத்து நெறி முறைப்படுத்த வேண்டும் என்பது சம்பந்தமாக எனது கருத்துக்கள் சிலவற்றை முன் வைக்க விரும்புகின்றேன்.

அதாவது எமது நடவடிக்கைகள் மூவின மக்கட் கூட்டங்களை நோக்கியதாக அமைய வேண்டும். ஒன்று எம்மக்கள் மற்றையது சிங்கள மக்கள் மூன்றாவது சர்வதேச மக்கள். இவர்கள் மூவருக்கும் எமது கருத்துக்கள் சென்றடைய வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.

இதுவரை காலமும் நாம் எமது மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டி வந்துள்ளோம். ஆனால் எம்முடன் இந்த நாட்டில் வாழப்போகும் சிங்கள மக்களுக்கு எமது கருத்துக்கள், கரிசனைகள், கவலைகள் சென்றடையவில்லை.

இன்று தெற்கில் எமது நிலை அறிய, எமது கலை அறிய, எமது கவலையில் பங்கு கொள்ள ஒரு ஆர்வம் ஏற்பட்டு வருகின்றது. இதுவரை காலமான இன ரீதியான முறுகல்கள் எமது பொருளாதாரத்தைச் சீரழித்துள்ளது என்ற ஒரு காரணம் அவர்களுக்கு கவலை அளிக்கின்றது.

உண்மை நிலையை ஊக்கமுடன் செயற்பட்டு அறிந்து கொள்ள வேண்டும் என்ற அவாவும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மீண்டும் ஒரு ஆயுத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டால் நாடு கொள்ளாது என்ற அவர்களின் ஆதங்கமும் அவர்களுக்கு இருக்கின்றது.

இதனால் அந்த மக்கட் சக்தியுடன் சேர்ந்து சிங்கள மக்களுக்குச் சென்றடையும் விதத்தில் எமது கவலைகளை, கரிசனைகளை, கட்டாய தேவைகளை எடுத்துரைக்க வேண்டிய ஒரு கட்டம் பரிணமித்துள்ளது என்பது எனது கருத்து.

சில காலத்திற்கு முன்னர் அன்பர் குசால் பெரேராவுடன் சேர்ந்து நாம் நடாத்திய பத்திரிகைப் பேட்டி நன்மை தருவதாக அமைந்திருந்தது. அவ்வாறான கூட்டங்கள் இனிமேலும் நடைபெறவேண்டும்.

தமிழ் மக்கள் பேரவை தம்முடன் ஒத்துழைக்கக்கூடிய தென் பகுதியைச் சேர்ந்தவர்களுடன் கூடி எமது கருத்துக்களை சிங்கள மக்கள் முன் வைக்கவேண்டும்.

ஆனால் மக்கள் எமது கருத்துக்களை அறிய ஆர்வமாக இருந்தாலும் கூட சிங்கள ஊடக உரித்தாளர்களை அல்லது ஆசிரியர்களை கொண்ட ஆங்கில நாளேடுகள் கூட எமது கருத்துக்களை சிங்கள மக்களிடம் சென்றடைய விடமாட்டார்கள் போலத் தெரிகின்றது.

அண்மையில் இலங்கைத் தமிழர் பற்றி அவர்தம் சரித்திரம் பற்றி இழிவாகப் பேசிய ஒரு சிங்கள அன்பருக்கு பதில் கடிதம் ஊடகத்தின் ஊடாக அனுப்பியிருந்தேன். அதனைப் பிரசுரிக்க ஆசிரியர் அனுமதியளிக்கவில்லை என அறிகின்றேன்.

உண்மைகள் வெளிவராதிருக்க இவர்கள் சிலர் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். ஆகவே தான் தமிழ் மக்களை அண்டி அவர்களின் பிரச்சினைகனை அறியும் அதே நேரம் அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கும் அதே நேரம் சிங்கள மக்களுக்கும் அறிவுறுத்தல்களை ஆணித்தரமாக எடுத்துரைத்தல் எமக்கு அவசியமாகியுள்ளது.

முன்னர் கட்சிகள் சார்ந்த சில ஒத்துழைப்புக்கள் இருந்து வந்தன. ஆனால் இப்போது கட்சி பேதம் இன்றி சிங்கள மக்கள் யாவருக்கும் எமது கருத்துக்கள் சென்றடைய நாம் வழிவகுக்க வேண்டும்.

ஏன் என்று நீங்கள் கேட்கலாம். இப்பொழுது ஜனநாயக முறையில் எமது உரிமைகளை வென்றெடுக்க உறுதி பூண்டுள்ளோம். ஜனநாயகம் மக்களின் வாக்குப் பலத்தில் தங்கியுள்ளது. அங்குள்ள மக்கள் மனமாற்றத்திற்கு ஆளானால் தான் இங்குள்ள எமது மக்களின் உரிமைகள் வென்றெடுக்கப்படலாம்.

இது ஜனநாயகத்தின் அவசியப்பாடு. இங்கு நாங்கள் எமது சிந்தனைகளின் போக்கைச் சிறிது அறிந்து வைத்திருக்க வேண்டும். முஸ்லிம் மக்கள் பண்டமாற்று அடிப்படையிலேயே தமது உரிமைகளைப் பெற்றெடுத்து வருகின்றார்கள்.

இன்று நாம் உங்களுக்கு இந்தந்த உதவியை அளித்தால் இவ்விவற்றை நீங்கள் எமக்கு தருவீர்களா? என்று கேட்டுப் பெற்று வருகின்றார்கள்.

ஆனால் எமது பாரம்பரிய ஆணவமும் மிடுக்கும் அவ்வாறான பண்டமாற்றத்தை வரவேற்பதில்லை. நாம் இந்த நாட்டின் நிரந்தர குடிமக்கள், இன்னொருவருடன் பண்டமாற்றத்தில் ஈடுபட எமக்குத் தேவை இல்லை, எமது உரித்துக்கள் தரப்பட வேண்டியவை. ஆகவே நீங்கள் தந்தே ஆகவேண்டும்.

என்ற கருத்திலேயே நாம் இதுவரை காலமும் பயணித்து வந்துள்ளோம். இதில் பிழை இல்லை. ஆனால் உண்மை நிலை என்ன என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். இவ்வளவு வீராப்பு பேசும் நாங்கள் வாய்ப்புக் கிடைத்தும் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுகின்றோம்.

இங்கு எமக்குப் பக்கபலம் இல்லை. அங்கு பணபலம் இருக்கின்றது. ஆனால் இங்கு பக்குவமாக பேசக்கூடிய பாங்கு எமக்கு இல்லாதிருக்கின்றது. ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பேரணிகளுக்கு நான் எதிரானவனல்ல.

ஆனால் நாம் செய்யும் ஒவ்வொரு பணியும் உரிய பயன்பாட்டை எமக்கு நல்க வேண்டும் என்று எண்ணுகின்றேன். எதற்கும் சிங்கள மக்களுடன் எமக்கு ஒரு கருத்துப் பரிமாற்ற யன்னல் அமைக்கப்பட்டால் அது நன்மை பயக்கும் என்று நம்புகின்றேன்.

அடுத்தது வெளிநாட்டு அரசாங்கங்களுடன் எமது உறவைப்பலப்படுத்த வேண்டும். என்னை காண வரும் வெளிநாட்டவர்கள் இலங்கை அரசாங்கத்தால் மூளைச் சலவை செய்யப்பட்டே வருகின்றார்கள்.

அவர்களின் கேள்விகள் அதனைப் பிரதிபலிக்கின்றன. இன்று உத்தியோகபூர்வ ரீதியாக நான் மட்டுமே அவர்களின் எண்ணப்பாடுகளை மாற்ற எத்தனித்து வருகின்றேன்.

உங்களில் பலர் வெளிநாடுகளின் உயர்ஸ்தானிகர்களுடன் உறவுகள் வைத்து அவற்றினூடாக அவர்களின் எண்ணங்களை மாற்ற எத்தனித்திருக்கக் கூடும்.

எது எவ்வாறிருப்பினும் நாங்கள் எங்கள் கொள்கைகளை, கேள்விகளுக்கான பதில்களை அரசாங்கம் உரைக்கும் உண்மைக்குப் புறம்பான கருத்துக்களுக்கான மாற்றுக் கருத்துக்களை உடனுக்குடன் பன்னாட்டுப் பிரதிநிதிகளுக்கு அறிவிக்க முன்வர வேண்டும்.

தமிழ் மக்கள் பேரவை வெறுமனே உணர்ச்சி பூர்வமான தீவிரப் போக்குடைய ஒரு அரசியல் அலகல்ல எதனையும் ஆறஅமர சிந்தித்து பதிலளிக்கக்கூடிய ஒரு பேரவையே என்று அவர்கள் அடையாளம் காணும் வகையில் எமது நடவடிக்கைகள் சிறக்கவேண்டும்.

நேற்றைக்கு முன் தினம் துருக்கி உயர்ஸ்தானிகர் ஒரு சுமூகமான தீர்வு வருவதற்கு நான் இடைஞ்சலாக நடந்து கொள்வதாக குற்றஞ்சாட்டினார். ஏன் சமஷ்டியை முன்னிலைப் படுத்துகின்றீர்கள் என்று கேட்டார்.

ஏன் வடக்கு கிழக்கை இணைக்கக் கேட்கின்றீர்கள் என்று கேட்டார். சமஷ்டி செக்கோஸ்லாவாக்கியா, யுகோஸ்லாவாக்கியா ஆகிய நாடுகளில் பிரிவினைக்கு இடங்கொடுத்துள்ளது என்றார்.

பிரிவினை வேண்டுமா என்பது இருதரப்பு மக்களும் ஒருவரோடு ஒருவர் பழகும் விதத்திலேயே அமைந்துள்ளது என்று கூறி க்யூபெக் கனடாவிலிருந்து பிரிய முன்வரவில்லை ஸ்கொட்லாண்ட் பிரித்தானியாவில் இருந்து பிரிய முன்வரவில்லை என்று எடுத்துக் காட்டினேன்.

பழகும் விதத்தில்தான் இவை அமைந்துள்ளன என்றேன். எம்மை அடிமைப்படுத்தும் விதத்தில் சிங்கள மக்கள் நடந்து கொண்டால் நாம் அடிபணிய வேண்டும் அல்லது போராட வேண்டும். எமது பாரம்பரியம் போராடுவதை ஒரு பொருட்டாக கருதவில்லை. ஆனால் அடிபணிய வைப்பதை எம்மக்கள் விரும்ப மாட்டார்கள் என்றேன்.

அத்துடன் ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப் பகிர்வு ஏன் எமக்கு நன்மை பயக்கப் போவதில்லை என்பது பற்றியும் எடுத்துக் கூறினேன். வடக்கு கிழக்கு இணைப்பை அவசியப்படுத்த இன்று வரை நடந்திருக்கும் சிங்கள உள்ளீடல்களையும் குடியேற்றங்களையும் காரணங் காட்டினேன். அவர் எமது கருத்துக்களை மங்கள சமரவீர அவர்களிடம் கொண்டு செல்வார் என்று எதிர்பார்க்கின்றேன்.

எனவேதான் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் அறிவை வளர்க்கும் அதே நேரம் சிங்கள மக்களிடையேயும் பன்னாட்டு பிரதிநிதிகள் இடையேயும் எமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வது அவசியம் என்று கருதுகின்றேன். உங்கள் யாவரதும் கருத்துக்களையும் அறிய ஆவலாய் உள்ளோம் என அவர் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

கம்ப்யூட்டரில் Pen Drive Detect ஆகவில்லையா?

Next Post

மஹிந்தவை அழைக்கும் மைத்திரி! அழைப்பை ஏற்பாரா மஹிந்த?

Next Post

மஹிந்தவை அழைக்கும் மைத்திரி! அழைப்பை ஏற்பாரா மஹிந்த?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures