சமந்தாவுக்கு கைகொடுக்கும் சிவகார்த்திகேயன்
நாக சைதன்யாவை விரைவில் மணக்க உள்ள சமந்தா, திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார். ஆனால் அவரை ஒப்பந்தம் செய்ய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். தற்போதுள்ள மவுசு திருமணத்துக்கு பிறகு சமந்தாவுக்கு குறைந்துவிடும் என்று அவர்கள் கருதுகின்றனர். அதையும் மீறி இரும்புதிரை, அநீதி கதைகள், விஜய் 61, நடிகையர் திலகம் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். ரெமோ படத்தை முடித்ததும் இயக்குனர் பொன்ராம் டைரக்ஷனில் நடிக்க சிவகார்த்திகேயன் பேச்சு நடத்தி வந்தார்.
இதற்கான கதை விவாதம் முடிந்து ஸ்கிரிப்ட் தயாராகி இருந்தது. இந்நிலையில் ‘தனிஒருவன்’ மோகனராஜா இயக்கத்தில் வேலைக்காரன் படத்தில் நடிக்க அழைப்பு வரவே அதை உடனே ஏற்றுக்கொண்டார் சிவகார்த்திகேயன். மோகனராஜாவின் படப்பிடிப்பு உடனடியாக தொடங்கப்பட்டதால் பொன்ராம் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போடப்பட்டது. தற்போது வேலைக்காரன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டி உள்ளது.
இதையடுத்து வரும் மே மாதம் பொன்ராம் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். திருமணம் நெருங்கிவந்தபோதும் அதுபற்றி கவலைப்படாமல் தொடர்ந்து அவரை ஹீரோயினாக நடிக்க வைக்க பட தரப்பு முடிவு செய்துள்ளது. இது சமந்தாவுக்கு கைகொடுக்கும் என கூறப்படுகிறது. பொன்ராம் இயக்கத்தில் ஏற்கனவே வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார்.