கனடாவில் 1.4 மில்லியன் தற்காலிக விசா விண்ணப்பங்கள் நிராகரிப்பு
லிபரல் அரசு பதவிக்கு வந்த பின்னர் சுமார் 1.4 மில்லியன் தற்காலிக விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக, புதிய ஆய்வறிக்கையொன்று தெரிவித்துள்ளது.
நிராகரிக்கப்பட்ட விசா விண்ணப்பங்களில் பெரும்பான்மையானவை தீவிரவாதம் தொடர்பான சந்தேகங்கள், குற்றவியல் பின்னணி, உளவு நடவடிக்கைகளில் ஈடுபாடு போன்ற காரணங்களினாலேயே நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரிகள் பயத்துடன் கூடிய ஒடுக்குமுறை நடவடிக்கைகளில் நேரடித் தொடர்புகளைக் கொண்டிருந்த காரணங்களால் ஏழு விண்ணப்பங்களும், அரச நிர்வாகத்தைச் செயலிழக்கச் செய்யும் முயற்சிகளில் தொடர்புபட்டிருந்தமையால் பதினொரு விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டதாக ஆய்வறிக்கை குறிப்பிடுகின்றது.
மேலும், கனேடிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடும் எனக் கருதப்பட்ட 26 பேரின் விண்ணப்பங்களும், தீவிரவாத அல்லது உளவு நிறுவனங்களுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தமையால் 79 பேரின் விண்ணப்பங்களும், விசா முடிந்தவுடன் தமது நாட்டிற்குத் திரும்பிச் செல்வோம் என உறுதிசெய்யத் தவறிய காரணத்தால் 930,576 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ஜெஸ்ரின் ரூடோ, தலைமையிலான லிபரல் அரசு கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 04ஆம் திகதி ஆட்சிக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.