இளம்பரிதி இரகசிய இடம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார்..! 20 லட்சம் செலவழிக்க வேண்டும்
விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த இளம்பரிதி இரகசிய இடம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்வதற்கு 20 லட்சம் ரூபா செலவு செய்ய வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தவர் தற்போதும் விசுவமடுவில் இருக்கின்றார் என இளம்பரிதியின் மாமி தங்கவேல் சத்தியதேவி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று 22 நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தனது மருமகனை பார்ப்பதற்கு 4 லட்சம் கொடுத்தேன். எனினும், அவரை பார்க்க முடியவில்லை.
கடந்த 2009ஆம் ஆண்டு ஐந்தாம் மாதம் 18ஆம் திகதி எனது மகள், மருமகன் (இளம்பரிதி) மற்றும் பேரப்பிள்ளைகள் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டார்கள்.
இலங்கை படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த போது, இராணுவ வீரர் ஒருவர் தன்னை “வீடடுக்கு போங்கள். இவர்களை விசாரித்து விட்டு அனுப்புகின்றோம்” என தெரிவித்து குறிப்பிட்டார்.
அத்துடன், தன்னை பொது மக்களுடன் அனுப்பி வைத்தார்கள். ஆனாலும், எனது மகள், மருமகன் உள்ளிட்டவர்களை இன்று வரையிலும் காணமுடியவில்லை.
தனது மருமகன் (இளம்பரிதி) இரகசிய இடம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரை விடுதலை செய்வதற்கு 20 லட்சம் ரூபா வரையில் செலவு செய்யவேண்டும் என தெரிவித்தார்கள்.
இவ்வாறு தன்னிடம் குறிப்பிட்டவர் தற்போதும் விசுவமடுவில் இருக்கின்றார். 20 லட்சம் அல்ல அதற்கு மேலாகவும் செலவு செய்ய முடியும். ஆனால் எனது மகள். மருமகன், மற்றும் பேரப்பிள்ளைகள் இருக்கும் இடத்தை காட்டுமாறு அவரிடம் கேட்டேன்.
அவர்களை பார்க்க வேண்டும் என்றாலும் 4 லட்சம் ரூபா வரையில் செலவு செய்ய வேண்டும் என அவர் மறுபடியும் தன்னிடம் குறிப்பிட்டார்.
2009-09-19 அன்று தனியார் வங்கி ஒன்றில் நபரின் பெயருக்கு நான்கு இலட்சம் ரூபாவை வைப்புச் செய்தேன், அதற்கான வங்கியின் ரசீது கூட தற்போது தன்னிடம் இருக்கின்றது.
இதனையடுத்து, தன்னை திருகோணமலைக்கு வருமாறு அழைத்தனர் அங்கு சென்ற போதும் அவர்கள் சொன்னது போன்று எதுவும் நடக்க வில்லை.
எனினும், நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை பின்னர் உணர்ந்துகொண்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.