அரசியலில் குதிக்கும் நடிகர் கமல்: நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தகவல்.
தனது அரசியல் பிரவேசம் குறித்து இதுவரை நேரடி பதில்களைக் கொடுக்காமல் இருந்துவந்த கமல், நாளை வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தவிருக்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் கமல் கடந்த சில மாதங்களாக தமிழக அரசியலில் தீவிரமாக இயங்கி வருகிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் முதல் நெடுவாசலில் நடைபெறும் ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான போராட்டம் வரை, அவரது ஒவ்வொரு டுவீட்டும் சர்ச்சையை உருவாக்கியவை. அதிலும் தேசிய ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டிகள் பரபரப்பை உண்டாக்கியது.
இந்நிலையில், தனது அரசியல் பிரவேசம் பற்றி நேரடி பதில்களைக் கொடுக்காமல் இருந்துவந்த கமல், நாளை வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தவிருக்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திடீரென வழக்கறிஞர்கள் ஆலோசனையும், அதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பும் என வெளியான தகவல் உண்மை என அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில் இருந்து உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
கமலின் சமீபத்திய அரசியல் டுவீட்டுகளுக்கு பின்னர், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை செய்ததாக அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் சிறையில் நலமாக இருக்கிறார்கள் என கமல் தெரிவித்திருந்தாலும், கமலின் எந்த முயற்சியும் பலிக்காமல் அவர்கள் சிறையில் இருப்பதால் அதுகுறித்து விவாதிக்க வழக்கறிஞர்களை கூட்டுகிறாரா என தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.
மேலும் இந்த சூழ்நிலையைப் பற்றிப் பேசவும், எதிர்காலத்தில் இப்படி ஏதாவது சம்பவங்கள் நடைபெற்றால் தனது ரசிகர் மன்றத்தினரை பாதுகாக்கவும் கமல் நற்பணி மன்ற வழக்கறிஞர்கள் ஆலோசனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இதில் மாவட்ட வாரியாக ரசிகர்களையும் ரசிகர் மன்ற வழக்கறிஞர்களையும் மட்டும் சந்திக்கிறார் எனவும், இதில் சினிமா மற்றும் பொது விஷயங்கள் பற்றியும் தன்மீதான இணையதள விமர்சனங்கள் பற்றியும் கலந்து பேசுகிறார் எனவும் கூறப்படுகிறது.