எடப்பாடி அரசை காப்பாற்றிய 500 கிலோ தங்கம்: வெளியான பகீர் தகவல்
அதிமுக அரசை காப்பாற்றும் பொருட்டு ஆதரவு வாக்களிக்க கட்சியில் உள்ள 121 எம்.எல்.ஏக்களுக்கு தலா 4 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் பழனியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், 3 கிலோ தங்கத்திற்கும் 3 கோடி ரூபாய்க்கும் ஆசைப்பட்டு மக்களின் நன்மதிப்பை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.கள் இழந்து விட்டார்கள் என கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அதிமுக எம்.எல்.ஏக்கல் இந்த குற்றச்சாட்டை மறுத்த போதும் சென்னையில் உள்ள தனியார் நகைக்கடை ஒன்றில் இருந்து 500 கிலோ தங்கம் 121 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் வீடுகளுக்கு விநியோகிக்கப் பட்டுள்ளது என வருமானவரித் துறை கண்டுபிடித்துள்ளது.
இந்த நிலையில் குறித்த நகைக் கடையின் உரிமையாளரை விசாரணைக்கு அழைத்த வருமானவரித்துறை அவரது ஒப்புதல் வாக்குமூலத்தை வாங்கியுள்ளது.
அதில், 22 கேரட் மதிப்புள்ள தங்கத்தின் இன்றைய மதிப்பு ஒரு கிராமுக்கு 2853 ரூபாய். ஒரு கிலோ 28 லட்சத்து 53,000 ரூபாய். மொத்தம் 500 கிலோ தங்கத்தை 142 கோடியே 65 லட்சத்துக்கு ஐக்கிய அமீரகத்தில் இருந்து வரவழைத்ததாகவும், அதை 121 எம்.எல்.ஏ.க்களுக்கு பங்கிட்டு அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் 4.13 கிலோ வீதம் சராசரியாக அளித்துள்ளதாக ஒப்புக்கொண்ட அவர், அந்த தங்கத்தின் மதிப்பு 1 கோடியே 18 லட்ச ரூபாய் என தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி அந்தந்த எம்.எல்.ஏ.க்களின் வீடுகளுக்கே கொண்டு போய் கொடுத்துள்ளதாக கூறும் அந்த நகை வியாபாரி, இந்த தங்கத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பமும் 400 சவரன் நகை செய்து கொள்ளலாம் என்றார்.
ஆனால் இதுவரை தமக்கு சேர வேண்டிய 142 கோடியே 65 லட்ச ரூபாயை அ.தி.மு.க. தலைமை தரவில்லை எனவும் விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.