சசிகலா வகுத்த அதிரடி திட்டம் அம்பலம்
சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்னரே அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அதிரடி திட்டங்களை வகுத்துள்ளது அம்பலமாகியுள்ளது.
அதாவது, முதல்வர் பதவியில் சசிகலாவுக்கு பதில் தினகரன் அல்லது திவாகரனை அமர வைக்க ஆலோசித்தபோது, மக்களிடம் மேலும் எதிர்ப்பு வரும் என்பதால் எடப்பாடி பழனிச்சாமியையும் தெரிவு செய்துள்ளார்.
குடும்ப அளவில் சசிகலா, நடராஜன், தினகரன், திவாகரன் உள்ளிட்டோர் ஆலோசித்ததில், மக்களிடமும், கட்சி நிர்வாகிகளிடமும் பெரிய அளவில் புகார் இல்லாத மற்றும் அறிமுகமான தினகரனை கட்சியின் துணைப் பொதுச் செயலராக ஆக்கி கட்சி பணியை கட்டுக்குள் வைப்பது என்றும் முடிவானது.
கூடவே, எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் முதற்கட்டமாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சியை அமைத்து, அரசின் பாதுகாப்புடன், திவாகரனை ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட செய்து, அடுத்த ஆறு மாதத்துக்குள் முதல்வராக்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
பொதுமக்கள், கட்சி, ஆட்சி என அனைத்து தரப்பினராலும் ஏற்கப்படாத சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு, இந்த திட்டத்தில் கடும் அதிருப்தி ஏற்பட்டது.
அவர் எந்த பொறுப்புக்கு வந்தாலும், அதை எவரும் ஏற்க மாட்டார்கள் என்பதை விளக்கி, கட்சி மற்றும் ஆட்சியில் நடராஜன் கூறும் பரிந்துரைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் ஒப்புதல்தெரிவிக்கப்பட்டது.
ஓ.பி.எஸ்., – எடப்பாடி பழனிச்சாமி போன்ற வெளி நபர்களை முதல்வராக்குவது, மதுசூதனன் போன்றவர்களை அவைத் தலைவராக்குவதால் எழும் சிக்கலை தவிர்க்க, மன்னார்குடி குடும்பத்தை சேர்ந்த ஒருவரை, இதுபோன்ற முக்கிய பதவிகளில் நியமிப்பது என்றும், தற்போதைய சிறை தண்டனை காலத்தில், அ.தி.மு.க., பொதுச் செயலராக சசிகலாவே தொடர்வது என்றும் தீர்மானித்தனர்.
எந்த பதவியும் இல்லாமல், சிறையில் இருப்பது பாதுகாப்பு இல்லை என்றும், கூடுதல் வசதிகள் கூட கிடைக்காது என்றும் விவாதிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் தான் முதல் கட்டமாக, ஜெயலலிதாவால் அடித்து விரட்டப்பட்ட தினகரன், வெங்கடேஷ் ஆகியோர் கட்சியில் சேர்க்கப்பட்டனர். அடுத்த சில மணி நேரத்தில் தினகரன், கட்சியின் துணை பொதுச் செயலராக அறிவிக்கப்பட்டார். ஆலோசனையின் போது கூறப்பட்ட முடிவுகளை, திட்டமாக வகுத்து கொடுத்து விட்டு தான் சசிகலா பெங்களூரு சிறைக்கு புறப்பட்டுள்ளார்.