Saturday, September 13, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தற்போது ஈழத் தமிழ் மக்களின் தேசியத் தலைவர் யார்? – மு.திருநாவுக்கரசு

January 23, 2017
in News, Politics
0
தற்போது ஈழத் தமிழ் மக்களின் தேசியத் தலைவர் யார்? – மு.திருநாவுக்கரசு

தற்போது ஈழத் தமிழ் மக்களின் தேசியத் தலைவர் யார்? – மு.திருநாவுக்கரசு

களத்தில் திரு.சம்பந்தனா?, திரு.விக்னேஸ்வரனா? அல்லது வேறு யாருமா? புலம்பெயர் மேற்குலகில் திரு.உருத்திரகுமாரனா?, இந்தியாவில் திரு.காசி ஆனந்தனா? அல்லது வேறு யாருமா? இக்கேள்விகள் தமிழ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறதோ இல்லையோ நிச்சயமாக தமிழ்த் தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

ஐ.நா. உள்ளக விசாரணைக் குழுவின் அறிக்கையின் படி 70,000க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இத்தொகை மேலும் அதிகமாக இருக்க முடியுமே தவிர குறையாது.

21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகில் நிகழ்ந்த மிகப் பெரும் மனிதப் படுகொலை இது என்பதும் அதிகம் ஆதாரங்களைக் கொண்ட ஒரு படுகொலை இது என்பதும் நிதர்சனமான உண்மையாகும்.

லண்டனை தலைமையகமாகக் கொண்டுள்ள சனல் – 4 தொலைக்காட்சியால் நேரடி களநிலை காணொளிப்படம் மற்றும் நிழற்படம் என்பனவற்றைக் கொண்ட ஆவணப்படம் வெளியாகியிருந்தது.

அவ்வாவணப்படத்தை ஏற்கத்தக்க உண்மையான ஆவணங்களென ஐ.நா. நிபுணர் குழு ஒப்புக்கொண்டுள்ளது. இதைத் தவிர உயிருள்ள நேரடி சாட்சியங்களும் உண்டு.

இப்பின்னணியில் தமிழ் மக்களின் பிரச்சினை சர்வதேச கவனத்திற்கு உரியதாக மாறியது மட்டுமல்ல நடந்து முடிந்த ஒரு பெரும் மனித அவலத்திற்கு உலகமும், அண்டைநாடும்

பெரிய ஜனநாயக நாடுமான இந்தியாவும், இலங்கை அரசும், ஈழத் தமிழ்த் தலைவர்களும் தக்க பதிலும், தீர்வும் காணவேண்டிய அவசியமும், பொறுப்பும் உண்டு.

இந்நிலையில் இக்கட்டுரையானது இது விடயத்தில் ஈழத் தமிழ்த் தலைவர்களின் பங்கையும், பணியையும், பொறுப்பையும், கடமையையும் தலைமைத்துவ மேன்மையையும் பற்றிய அக்கறையை எழுப்புகிறது.

ஈழத் தமிழரின் வாழ்வில் தேசிய முக்கியத்துவம் மிகப் பெரிதாக எழுந்துள்ள காலமிது. இதற்கு முன்னரான காலங்களில் வாழ்ந்த ஈழத் தமிழ்த் தலைவர்கள் எவ்வளவு தூரம் தமிழ்த் தேசியப் பண்பு நிறைந்தவர்களாக, தமிழ்த் தேசியத் தலைவர்களாக ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்துள்ளார்கள் என்ற கேள்விக்கு எதிர்காலத்தில் விடைகாணப்பட வேண்டுமேயாயினும் தற்போது உள்ள தலைவர்கள் எவ்வளவு தூரம் தமிழ்த் தேசிய பண்புள்ளவர்களாகவோ அல்லது தேசியத் தலைவர்களாகவோ உள்ளனர் என்பதை இன்றைய சமூகம் தெளிவு கண்டறிந்தாக வேண்டும்.

மலை உச்சியில் இருக்கும் விளக்கிற்கு விளம்பரம் தேவையில்லை. ஒருவர் தேசியத் தலைவராக இருக்கிறார் என்றால் அது அவரது வாழ்வில் பளிச்சிடும்.

எப்படியோ மண்ணோடு ஒட்டிய சிந்தனை இல்லாதவர்களும், மக்களின் வாழ்வோடு இணைந்திருக்காதவர்களும் ஒருபோதும் தேசியத் தலைவர்களாக இருக்க முடியாது.

90,000க்கும் மேற்பட்ட விதவைகள் இதில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் இளம் விதவைகள்.

தாயை இழந்த பிள்ளைகள், தந்தையை இழந்த பிள்ளைகள், தாயையும் – தந்தையையும் இழந்த பிள்ளைகள், அங்கவீனமுற்றோர் என்று ஒரு பெரும் தொகையினரைக் கொண்ட தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கும் தலைவர்கள் இக்காலத்திற்தான் அதிக முன்னுதாரணத்துடனும், அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு உலகிற்கு உன்னதங்களின் தோற்றுவாய்களாக காட்டவேண்டிய காலமும், சூழலும் தமிழ் மக்கள் முன் விரிந்திருக்கிறது.

கொல்லப்பட்டவர்கள் ஒருபுறம், கொல்லப்பட்டவர்கள் பற்றிய துயரத்தை சுமக்கும், கூடவே அவர்களின் பொறுப்புக்களைச் சுமக்கும் உறவினர்கள் நிலை மிகவும் பரிதாபகரமானது.

குடும்பத் தலைவர்களை இழந்தோரும், குடும்பத்திற்கு சோறுபோடும் உழைப்பாளிகளை இழந்த குடும்பங்களும், காணாமல் ஆக்கப்பட்டோரை எண்ணித் தவிக்கும் இனிய உறவினர்களின் துயரங்கள், சுமைகள், இடப்பெயர்வுகள், குடும்பத்தோருடனான பிரிவுகள், பிள்ளையைப் பார்க்க முடியாத தாய், உறவினர்களைப் பிரிந்துள்ள உறவினர்கள் என சின்னா பின்னப்பட்டுள்ள குடும்ப உறவுகள் போன்ற பின்னணியில் சமூகத் தலைவர்களினதும், அரசியல் தலைவர்களினதும், அறிஞர்களினதும், சமூக ஆர்வலர்களினதும் பொறுப்பும், பணியும் முக்கியமானது. இவற்றில் அரசியல் தலைமைத்துவம் தனி முதன்மை வாய்ந்தது.

தமிழ் மக்களின் பிரச்சனை வெறுமனே மனிதஉரிமை பிரச்சனையல்ல. அதற்கும் அப்பால் அவர்களுடைய தேசிய வாழ்வும், உயிர் பாதுகாப்பும், உடைமை பாதுகாப்பும், வாழ்விடப் பாதுகாப்பும், பண்பாட்டு பாதுகாப்பும் பற்றியது மட்டுமன்றி அச்சமின்றி எத்தகைய அச்சுறுத்தல்களுக்கும் உட்படாத சூழல் நிறைந்த பின்னணியில் தமது ஆக்க சக்திகளை வளர்த்தெடுக்கக்கூடிய நிலையே வாழ்வுரிமையும், வளர்ச்சிக்கான உரிமையுமாகும்.

இராணுவ, பொலீஸ், உளவுத்துறை அச்சுறுத்தலற்ற சூழலில் சுதந்திர பூமியில், சுதந்தர காற்றைத்தழுவும் இனிய சூழலில் ஆக்கத் திறன்களை வளர்க்கவல்ல, கலை, இலக்கிய பண்பாட்டு அம்சங்களை மேம்படுத்தவல்ல ஒரு வாழ்க்கைச் சூழலே தமிழ் மக்களினது தேசிய வாழ்விற்கான அடிப்படையாகும்.

நீரும், நிலமும், மண்ணும் வளமும், காற்றும், வனமும், பயிரும், வனவிலங்குகளும், வீட்டு விலங்குகளும், பூச்சிகளும் பூராண்களும் என்பனவற்றுடன் கூடவே வாழும் வாழ்நிலைதான் தேசிய வளர்ச்சிக்கான அடிப்படையாகும்.

யுத்தத்தால் அனைத்துவகை நிறுவனங்களும் அமைப்புக்களும் ஒன்றுகூடல் முறைகளும், கூடிக்குலவும் சூழலும் சின்னா பின்னப்பட்டிருக்கும் ஒரு சமூகத்தில் புதிய வீச்சுடன் உன்னதங்களும், உன்னத முன்னெடுப்புக்களும் முதன்மை பெறவேண்டிய காலம்.

சங்ககாலம் யுத்தத்தில் அழிந்த போது வெறுமனே உயிரிழப்புக்கள் மட்டும் ஏற்படவில்லை. வாழ்க்கையின் கட்டமைப்பும், பண்பாட்டு தளமும் சீர்குலைந்தது.

இந்நிலையில் அவற்றை மீட்டெடுக்க சங்கம் மறுவிய காலம் தோன்றியது. அறநூல்கள் தோன்றின, அறவழி இலக்கியங்கள் எழுந்தன. அன்பும், அறமும், வாழ்வும் வளமும் முதன்மைப்படுத்தப்பட்ட சமூக நிர்மாணம் உருவானது.

2ஆம் உலக யுத்தத்தின் பின்பு இது ஜப்பானுக்கும் பொருந்தும், ரஸ்யாவிற்கும் பொருந்தும், ஐரோப்பிய நாடுகள் பலவற்றிற்கும் பொருந்தும்.

முள்ளிவாய்க்காலில் மனிதப் பேரவலத்திற்கும், பேரழிவிற்கும் உள்ளாகி பௌதீக ரீதியாக சின்னா பின்னப்பட்டிருப்பது மட்டுமன்றி ஆத்மாத்த ரீதியாக, நம்பிக்கைகளையும், எதிர்பார்க்கைகளையும் இழந்து நடைப்பிணங்களாக ஆகியுள்ள ஈழத் தமிழரின் வாழ்வில் ஒரு புதிய சிந்தனையும், வீரியமுள்ள ஒரு புதிய தலைமையும் தேவைப்படும் காலமாக 2010க்கள் விரிந்தது. இதில் இதுவரை ஏழரை ஆண்டுகள் கடந்துவிட்டன.

இப்பின்னணியில் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்த புதிய சிந்தனை என்ன? புதிய வழிகாட்டல் என்ன? என்பனவற்றுடன் வீரியமுள்ள தலைமை எழுந்துள்ளதா? என்ற கேள்விகளுக்கான பதில் மக்களின் கண்முன் இயல்பாகவே காட்சியளிக்கின்றன. உள்ளங்கை நெல்லிக்கனிபோல் காட்சிகள் வெளிப்படையாக உள்ளன.

தமிழ்த் தலைவர்கள் கடந்த ஏழரை ஆண்டுகளில் எத்தகைய சிந்தனைகளை முன்வைத்ததார்கள், எத்தகைய திட்டங்களை வரைந்தார்கள். அதில் எவற்றில் வெற்றிபெற்றார்கள்.

எவற்றில் வெற்றி பெறவில்லை என்பது போன்ற லாப நட்ட கணக்கை அனைவரும் பார்த்தாக வேண்டும். என்ன திட்டத்தைக் கொண்டிருந்தோம். எத்தகைய தமிழ்த் தேசிய முன்னெடுப்புக்களை மேற்கொண்டோம்.

எமது குழந்தைகளுக்கு எத்தகைய நம்பிக்கைகளை முன்னிறுத்தியுள்ளோம் என்ற கேள்விகளை தலைவர்களும், அறிஞர்களும் தம்மைத்தாமே கேட்டு பதில் காணவேண்டும்.

தலைவர்களாக முன்தோன்றி அதற்கான பொறுப்பை ஏற்றவர்கள் அவற்றிற்காக எத்தகைய தெளிவான சிந்தனைகளை முன்வைத்தார்கள், எத்தகைய தீர்க்கதரிசனங்களுடன் எதிர்காலத்தை அணுகினார்கள் அல்லது அணுகுகிறார்கள் என்ற கேள்விகளுக்கு அவர்களே பதில்காண வேண்டும்.

இவ்விடத்தில்தான் தேசிய சிந்தனை பற்றிய பிரச்சினையும், அவற்றிற்கான தலைமைத்துவம் பற்றிய பிரச்சினையும் அந்த தலைமைத்துவத்திற்கான ஆளுமை பற்றிய பிரச்சினையும் முன்னெழுகிறது. இதில் தம் ஆளுமையை நிலைநாட்டியுள்ள தேசியத் தலைவர்கள் யார் என்பதற்கு அவர்களே பதில்காண வேண்டும்.

யூதர்கள் உலகில் ஒரு சிறிய மக்கள் தொகைதான். ஆனால் அவர்கள்தான் இன்றைய உலக நாகரிகத்தின் ஈட்டிமுனையாக உள்ளார்கள். உலக நாகரீகத்திற்கு பெரும் பங்களித்த விஞ்ஞானிகள், தொழில்நுட்பவியலாளர்கள், அறிஞர்கள், தத்துவஞானிகள், தீர்க்கதரிசிகள் என உன்னதமான மாந்தர்கள் தோன்றிய ஒரு தேசிய இனம் அது.

காலத்திற்குக் காலம் தொடர் அழிவுகளுக்கு உள்ளான மக்கள் அவர்கள். அவர்களின் 3000 ஆண்டு காலத்திற்கு மேற்பட்ட வரலாறு அழிவுகளின் வரலாறுதான். அந்த மக்கள் மத்தியிலிருந்துதான், அந்த அழிவுகளின் படிப்பினைகளிலிருந்துதான், அதன் தாக்கத்திலிருந்துதான் மேற்படி பெரும் மாந்தர்கள் அச்சமூகத்தில் தோன்றினர்.

விஞ்ஞானி ஐன்ஸ்டீனும், தத்துவஞானி கார்ல்மார்க்சும், உளவியல் மேதை சிக்மண்ட் பிராய்டும் இதில் சில உதாரணங்கள்.

70,000 ஆண்டுகால தொடர் வரலாற்றைக் கொண்டது சீனம். அவர்கள் தமக்கென வீரியமான ஒரு தேசிய, பேரரச உணர்வைக் கொண்டவர்கள். அவர்களின் ஆக்க சக்தி தொடர் வளர்ச்சியில் உள்ளது.

கடந்த ஒலிம்பிக் விளையாட்டுக்களில் சர்வதேச ரீதியில் தங்கம், வெள்ளி, பித்தளை பதக்கங்களை குவித்தவர்கள். இது இது அவர்களது சமூக எழுச்சியனதும், கூட்டு உழைப்பினதும், முன்னுதாரணங்களை படைக்க வேண்டுமென்ற ஆர்வத்தினதும் குறியீடு.

1949ஆம் ஆண்டிலிருந்து சீனா தனது நிலப்பரப்பையும், கடற்பரப்பையும் தொடர்ந்து அகட்டி வருகிறதே தவிர குறைக்கவில்லை. 1949ஆம் ஆண்டு புரட்சியில் வெற்றி பெற்ற சீனா 1950ஆம் அக்டோபர் மாதம் திபெத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது.

1962ஆம் ஆண்டு அது இந்தியாவுடன் யுத்தம் புரிந்து ஒரு பகுதி நிலைத்தை தன்னுடைன் இணைத்துக் கொண்டது. 1979ஆம் ஆண்டு வியட்நாமிற்குள் படையை அனுப்பி அங்கு இராணுவ மேலாண்மையை நிருபித்தது.

1999ஆம் ஆண்டு கொங்கொங்கை தன்னுடன் இணைத்துக் கொண்டது. அடுத்து அது தாய்வானை தன்னுடன் இணைக்கும் குறிக்கோளைக் கொண்டுள்ளது.

இங்கு இது தொடர்பான சரி பிழை என்ற விமர்சனத்தை இக்கட்டுரை செய்யவில்லை. ஆனால் அவர்கள் தமது பேரரச தேசியப் பாதையில் நேர்கணியமாக தொடர்ந்து முன்னேறிச் செல்கிறார்கள்.

அதேவேளை ஜப்பான் தேசியத்திற்கு தனிவிசேட முன்னுதாணங்களைக் கொண்டது. கடும் உழைப்பார்வம், அர்ப்பணிப்பு, பண்பாட்டு விருப்பார்வம், பேரரச விசுவாசம், தொழில்நுட்பத் திறன், தற்பெருமை, தன்னாதிக்க உணர்வு என்பன அதிகம் கொண்ட ஒரு தேசிய சிந்தனையைக் கொண்ட ஒரு சமூகமாக அவர்கள் காணப்படுகிறார்கள்.

இதில் உள்ள குறைபாடுகள், விமர்சனங்கள் என்பன வேறுவிடயம். ஆனால் அவர்களிடம் காணப்படும் தேசியம் பற்றிய சிந்தனையும், முனைப்பும் இங்கு கவனத்திற்குரியது.

ரஸ்யர்கள் வினோதமான தேசியப்பற்றுக் கொண்டவர்கள். அவர்கள் எப்போதும் ரஸ்யாவின் மேலாண்மை பற்றிய சிந்தனையில் விட்டுக் கொடுப்பின்றி ஊறிப் போனவர்கள். அவர்களை நாம் சரிவரப் புரிந்து கொள்வதற்கான தகவல் வளம் எம்மிடம் இல்லை.

ஆனால் அவர்களை உலகம் புரிந்து கொண்டதும் குறைவுதான். எப்படியோ அவர்கள் தேசிய மேலாண்மையின் மீது தமது சமூக மேண்மையை சிந்திப்பவர்கள் என்பது தெரிகிறது.

அமெரிக்கா கேள்விக்கு இடமற்ற முதற்தர உலகப் பெருவல்லரசு. அது மேலாண்மையை தனது ஆத்மாவாகக் கொண்டுள்ளது. ஐந்து நூற்றாண்டுகளுக்கு உட்பட்ட பல்லின குடியேற்ற கலாச்சாரத்தால் வடிவம் பெற்ற நாடு அது.

ஆனாலும் வெள்ளையின மேலாண்மையின் கீழ் பல்லின கலப்பிற்கு உள்ளாகியிருக்கும் ஒரு நாடு. அதற்குள் அது ஆதிக்க மனப்பாங்கை தனது அச்சாணியாக நிறுத்தியுள்ளது.

ஒலிம்பிக் விளையாட்டில் அமெரிக்கா முதல்தர வரிசையில் நிற்கின்றது என்பது உண்மைதான். ஆனால் அதன் வீரர், வீராங்கனைகள் பல்வேறு நாடுகளிலிருந்தும் அமெரிக்கா நோக்கி கவர்விசைக்கு உள்ளாகி அமெரிக்க குடிமக்கள் என்ற பெயரில் பரிசு பெறுபவர்கள்.

இதில் ஒரு வினோதமான தேசியம் உண்டு. இத்தகைய ஒரு வினோதமான கலப்பு தேசியத்தை வடிவமைத்ததில் அமெரிக்க சிந்தனையாளர்களும், தலைவர்களும் பல முன்மாதிரிகளைக் கொண்டுள்ளனர்.

மேற்படி நாடுகளினதும், சமூகங்களினதும் அனுபவங்களிலிருந்து ஈழத் தமிழர்கள் தம்மை ஒரு வளமான வீரியமிக்க தேசியமாக கட்டமைப்பு செய்ய வேண்டும்.

இதற்கு அறிஞர்களும், தலைவர்களும் தயாராக உள்ளனரா என்பதற்கான அறிகுறிகள் இன்னும் தெரியவில்லை என்பதை முள்ளிவாய்க்காலுக்கு பின்னான காலம் சோகத்துடன் முன்னிறுத்துகிறது.

2ஆம் உலக யுத்தத்தின் பின் கொமோண்டோ தாக்குதல்களின் வரிசையில் இஸ்ரேலிய கொமோண்டோ பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட “என்டர்பே” பணயக் கைதிகள் மீட்பு விவகாரம் முதன்மையானது.

அடுத்து மேலும் இஸ்ரேலால் ஈராக்கின் அணு உலைகள் மீது நடத்தப்பட்ட வெற்றிகரமான அதிரடி விமானத் தாக்குதலும் இராணுவ வரலாற்றில் தனி முத்திரைக்குரியது.

இந்த வரிசையில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட “கட்டுநாயக்கா” விமானதளத்தின் மீதான கொமோண்டோ தாக்குதலின் வெற்றி, மற்றும் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆணையிறவு இராணுவ முகாம் மீதான தாக்குதலின் போது குடாரப்பு தரையிறக்கல், அமெரிக்க இரட்டை கோபுரத்தின் மீதான பில்லேடனின் அதிரடித் தாக்குதல், அமெரிக்க கொமோண்டோக்கள் ஊடுருவி பில்லேடனை கொன்ற அதிரடித் தாக்குதல் என்பவெல்லாம் அதிரடித் தாக்குதல்களில் உலக முக்கியத்துவத்திற்குரிய வரிசையைச் சார்ந்தவை. சரி-பிழை, நல்லது, கெட்டது என்பவற்றிற்கு அப்பால் இவை சமூக ஆளுமைகள் பற்றிய மதிப்பீட்டிற்கான குறியீடுகள் என்பதை மட்டும் கருத்தில் எடுத்தால் போதும்.

ஈழத் தமிழர்கள் வீரியத்துடன் செயற்படுவதற்குரிய புவியியல் மற்றும் வரலாற்று பின்புலத்தைக் கொண்டவர்கள். இந்த மக்களிடம் நல்ல விடயங்களை முன்னெடுத்து சிறப்பான ஒரு புதிய தேசியவாதத்தை கட்டியெழுப்ப முற்பட்டால் அது செயற்திறனுடன் கைகூடக்கூடியது.

ஆனால் தமிழ் மக்களின் தலைவர்களிடம் தெளிவான பார்வையும், தீர்க்கமான சிந்தனையும், திடசித்தமான தீர்மானங்களும், உறுதியான நடவடிக்கைகளும், நீண்டகால கண்ணோட்டமுள்ள உன்னத முன்னெடுப்புக்கள் இன்னும் கண்முன் தோன்றவில்லை.

இப்போது இதுபற்றி தமிழ்த் தரப்பினரும், தமிழ்த் தலைவர்களும், தமிழறிஞர்களும் தம்மை நோக்கி தாமே கேள்வி கேட்டு அதற்கு பதில்காணவேண்டும்.

களத்தில் சம்பந்தன், விக்கினேஸ்வரன் என்போர் இருவழிகளில் தமிழ் மக்களால் பெரிதும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்களுக்கான பொறுப்பு பெரியது.

எப்படியோ கடந்த காலம் முழுவதிலும் அனைத்து தமிழ்த் தலைவர்களுமே இறுதித் தோல்வி அடைந்தவர்கள். இப்போது சம்பந்தனின் தலைமையும் தோல்வி முகத்திற்தான் இருக்கிறது.

விக்கினேஸ்வரனின் தலைமைத்துவமும் வெற்றிக்கான பாதையை இன்னும் காட்டவில்லை.

விக்கினேஸ்வரனின் கண்ணியத்தின் மீது தமிழ் மக்கள் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளனர். தலைவரின் கண்ணியம் சமூகத்தின் மதிப்பிற்கு ஊன்றுகோலானது.

விக்கினேஸ்வரனின் கண்ணியமும், அவரது குரல் கொடுப்பும் தமிழ் மக்களின் போராட்டத்திற்கும், நியாயத்திற்கும் மதிப்பையும், கௌரவத்தையும் தேடிக் கொடுக்கத் தவறவில்லை.

ஆனால் அவரிடன் தமிழ்த் தேசிய ஆக்கத்திற்கும் வளர்ச்சிக்கும், வெற்றிக்குமான திட்டங்கள், தீர்மானங்கள் இருப்பதாக வெளிப்படை அர்த்தத்தில் தெரியவில்லை. அவரிடம் சமூகத்தின் எதிர்ப்பார்க்கையும் பெரியது, அதற்கான பொறுப்பும் பெரியது.

எப்படியோ தாம் வீரியமுள்ள முன்னுதாரணம் கொண்ட செயற்திறன்மிக்க தலைவர்கள் என்பதை நிரூபிக்க சம்பந்தனும், விக்கினேஸ்வரனும் அதிக தூரம் பயணித்தாக வேண்டும்.

ஆயிரம் பிரசங்கங்களைவிடவும், கண்ணியமான தேசியத் தலைவனின் பிரசன்னம் மேலானது. இதனை தமிழ்த் தலைவர்களுக்கு சொல்லி வைக்க வேண்டிய வரலாற்றுப் பொறுப்பு முன்னெழுந்துள்ளது.

1970களில் அமைச்சர்களுக்கு கறுப்பு கொடி காட்டுமாறு அழைப்புவிடுத்த தலைவர்கள், அவர்களின் வாரிசுகள் இன்று அமைச்சர்களுக்கு செங்கம்பளம் விரிக்கும் காலம் கண்ணில் தெரிகிறது.

பகவத்சிங்கையும், கரிபால்டியையும், மாசினியையும் முன்னுதாரணமாக அழைத்து 1977 தேர்தல் கூட்டங்களில் தமிழ்த் தலைவர்கள் பேசி இளைஞர்களை போராட வருமாறு அழைத்தனர்.

அந்த அழைப்புக்களால் உந்தப்பட்டு அப்போது மேடைகளில் தம் விரல்களை கூரிய கத்திகளால் பிளந்து ரத்தத் திலகமிட்டவர்கள் புதைகுழிகளுக்குள் விதையாகிவிட்டனர்.

ஆனால் ரத்தத் திலகத்தை நெற்றியில் ஏந்தியவர்கள் தங்கள் தலைகளில் கீரிடங்களை அணிந்துள்ளனர். கறுப்புக் கொடிகளுக்கும், செங்கம்பளங்களுக்கும் இடையே மாண்டு மடிந்த இளைஞர்கள் யுவதிகள் பொதுமக்கள் மற்றும் இழப்புக்கள் என்பனவற்றிற்கு மறுமதிப்பீடு செய்ய வேண்டிய காலமிது. கூடவே உரியவர்கள் அதற்கான பொறுப்பையும் ஏற்கவேண்டிய காலமிது.

இப்பின்னணியில் தமிழ்த் தலைவர்களின் தேசியப் பணியென்ன?

களத்தில் சம்பந்தன் தேசியத் தலைவரா? விக்கினேஸ்வரன் தேசியத் தலைவரா? அல்லது வேறு யாரும் தேசியத் தலைவர்களாக தம்மை நிரூபித்துள்ளனரா என்ற கேள்விக்கு அவர்கள் பதில்காண வேண்டும்.

புலம்பெயர் தேசத்தில் இக்கேள்விக்கு மேற்குலகில் உத்திரகுமாரும், இந்தியாவில் காசி ஆனந்தனும் இதைத் தவிர புலம்பெயர் நாடுகளில் வேறுயாராவது இருப்பின் அவர்களும் இதற்கான பதிலை தம்மிடம் தாமே கேட்டு கண்டுகொள்ள வேண்டும்.

Tags: Featured
Previous Post

பெண்கள் பேரணிக்கு ஆதரவாக குயின்ஸ்பார்க்கில் திரளும் மக்கள் அலை.

Next Post

மஹிந்த – மைத்திரி ஒன்றிணைவு..! ஐக்கிய தேசிய கட்சியின் நிலை என்னவாகும்..?

Next Post

மஹிந்த - மைத்திரி ஒன்றிணைவு..! ஐக்கிய தேசிய கட்சியின் நிலை என்னவாகும்..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures