ஜல்லிக்கட்டை தொடக்கி வைப்பேன்! சென்னை விமான நிலையத்தில் பன்னீர் பேட்டி
‘ஜல்லிக்கட்டு போட்டியை நீங்கள் தொடங்கி வைப்பீர்களா’ என்ற கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘உங்கள் விருப்பப்படியே அது நடக்கும்’ என்றார் மகிழ்ச்சியுடன்.
ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பிற்பகலில் சென்னை திரும்பினார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை நேற்று சந்தித்துப் பேசினேன்.
அதன் பின்னர் ஒருநாள் அங்கேயே தங்கியிருந்து சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்துவதற்குரிய அவசர சட்டத்தினை கொண்டு வரக்கூடிய ஏற்பாடுகளை செய்து முடித்துள்ளேன்.
சட்ட முன்வடிவுகள் தயார் செய்யப்பட்டு மத்திய உள்துறை, சட்டத்துறை, வனம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் ஒப்புதல் பெற்று இன்று மாலை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
குடியரசுத் தலைவர் அலுவல் பயணமாக வெளியூர் சென்றிருப்பதால் இன்று இரவுதான் அவர் டெல்லி திரும்புகிறார்.
நாளை குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று நம்முடைய ஆளுநர் மூலமாக உரிய சட்டத்திருத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக மக்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் வாழுகின்ற அனைத்து தமிழர்களின் விருப்பத்துக்கு ஏற்றபடி நாளை அல்லது நாளை மறுநாள் அவசர சட்டம் என்ற மகிழ்ச்சியான செய்தி வரும்.
உறுதியாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும். மாணவர்களும், இளைஞர்களும் எதிர்பார்த்த அந்த வாடிவாசல் விரைவில் திறக்கப்பட்டு ஜல்லிக்கட்டுக் காளைகள் துள்ளிக்குதித்து வரும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள், ‘ஜல்லிக்கட்டு போட்டியை நீங்கள் தொடங்கி வைப்பீர்களா’ என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த முதல்வர், ‘உங்கள் விருப்பப்படியே அது நடக்கும்” என்றார் மகிழ்ச்சியுடன்.
அவசர சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தால்… என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ‘நம்பிக்கை அடிப்படையில் செய்கிறோம். அதுபோன்ற தடை வராது’ என்றார் முதல்வர்.
பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்துவீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த முதல்வர், எந்த தடை வந்தாலும் அதை சட்டத்தின் மூலம் தமிழக அரசு நீக்கும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.