சசிகலா எதிர்ப்பு தலைவர்கள் சரண்டர் ஆனது எப்படி தெரியுமா? வெளியானது போயஸ் தோட்டத்து ரகசியம்
அதிமுகவை வழி நடத்தும் பொறுப்பை சசிகலா ஏற்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதால் அதை சமாளிக்க, ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்ட டி.டி.வி.தினகரனை களத்தில் இறக்கி தலைவர்களை சமாளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக கட்சி நிர்வாகத்தில் இருந்து ஜெயலலிதாவால் பல ஆண்டுகளாக முழுமையாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த முன்னாள் எம்.பி தினகரை சசிகலா தரப்பு தங்களுடன் ஒத்துழைக்க கோரியுள்ளது.
இதனையடுத்து கடந்த சில நாட்களாக தீவிர அரசியலில் களம் இறங்கியுள்ளார் டி.டி.வி. தினகரன். தினமும் அதிகாலையிலேயே போயஸ் தோட்டம் வரத் துவங்கிய அவர், கட்சியில் சசிகலாவுக்கு யார் யார் எல்லாம் எதிர்ப்பாக இருக்கின்றனர் என்ற பட்டியலை எடுத்துள்ளார்.
குறித்த தலைவர்கள் ஒவ்வொருவரையும் தொடர்பு கொண்ட தினகரன் தனது மெலிதான குரலில் பேசத் துவங்கியுள்ளார். செங்கோட்டையனில் துவங்கி கே.பி.முனுசாமி வரை சசிகலாவின் எதிர்ப்பு முகாமில் இருந்த ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகப் பேசியுள்ளார்.
கடந்த கால கசப்புகள் இனி ஒரு நாளும் நடக்காது. அதற்கு நான் கியாரண்டி. ஏற்கனவே எனக்கு இருந்த சில நெருடல்களும் முழுவதுமாக நீங்கி விட்டன.
சசிகலா கட்சியின் பொதுச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஆட்சி மற்றும் கட்சியில் என்னைப் போன்றவர்களுக்கு கட்டாயம் முக்கியத்துவம் இருக்கும். அப்படி இருக்குபோது உங்கள் பிரதிநிதியாக இருந்து நான் உங்களுக்கு உதவிடுவதைத் தவிர வேறு யாருக்கு உதவிடப் போகிறேன்?
ஆட்சி அதிகாரத்தைப் பொறுத்த வரையில் முதல் நபராக இருந்து செயல்படும் முதல்வர் பன்னீர்செல்வம் என்னால் கட்சியில் அடையாளப்படுத்தப்பட்டவர்தான். அவர் ஒருநாளும் நான் வைக்கும் வேண்டுகோளை மீறி செயல்பட மாட்டார். அவருக்கு என் மீது அப்படியொரு அன்பும், பற்றுதலும் உண்டு என்று உருக்கமாகப் பேச எதிர்ப்பாளர்கள் ஒன்றன்பின் ஒன்றாக சரண்டர் ஆகியுள்ளனர்.
சசிகலாவுக்கு எதிர்ப்பாக செயல்பட்ட தலைகள் எல்லாம் திடீரென டிராக் மாறி சரண்டர் ஆனதன் பின்னணி இதுதான் என அ.தி.மு.க. வட்டாரங்களிலே பரபரப்பாக பேசப்படுகிறது.
டிசம்பர் 29ஆம் திகதி வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அ.தி.மு.க., பொதுக்குழு என முடிவு செய்தது கூட தினகரன் ஆலோசனைபடிதான் நடந்ததாக சொல்கிறது போயஸ் வட்டாரம்.