சுவிஸில் கொலை செய்த இலங்கை தமிழர்: 15 ஆண்டுகள் சிறை விதித்த நீதிமன்றம்
சுவிட்சர்லாந்து நாட்டில் காதலியை கொலை செய்துவிட்டு வெளிநாட்டிற்கு தப்பிய இலங்கை தமிழர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இலங்கை தமிழரான 44 வயதான நபர் ஒருவர் இலங்கை தமிழ் பெண்ணான தனது காதலியுடன் சுவிஸில் குடியேறி வசித்து வந்துள்ளார்.
பேசில் நகரில் தங்கியிருந்த இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 2000-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 வயதான தனது காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அவர் தப்பியுள்ளார்.
போலியாக கடவுச்சீட்டு தயார் செய்த அந்நபர் சுவிஸை விட்டு வெளியேறி நியூஸிலாந்து நாட்டில் குடியேறியுள்ளார். பின்னர், அங்கு புதிதாக திருமணம் செய்து 2 பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார்.
தமிழரின் நடவடிக்கையால் திருப்தி அடைந்த நியூஸிலாந்து அரசு அவருக்கு அந்நாட்டு குடியுரிமையும் வழங்கியது.
இந்நிலையில், வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றபோது சுவிஸில் காதலியை அவர் கொலை செய்தது 2014-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நியூஸிலாந்து அரசின் அனுமதி பெற்று 2015-ம் ஆண்டு தமிழர் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.
பின்னர், பேசல் நீதிமன்றத்தில் அவர் மீதான கொலை குற்றம் தொடர்பான விசாரணை நடைபெற்று வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அவர் மீதான குற்றம் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட நிலையில் அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.