ஸ்காபரோ பகுதியில் தீ பரவல்: யாருக்கும் பாதிப்பில்லை
கனடாவின் ஸ்காபரோ பகுதியில் அமைந்துள்ள உயர்மாடிக் கட்டிடம் ஒன்றில் நேற்று (புதன்கிழமை) அதிகாலை தீ பரவியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆயினும் அதிஷ்வசமாக இதன்போது யாரும் பாதிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மிட்லான்ட் அவனியூ மற்றும் எக்ளிங்டன் அவனியூ பகுதியில், அமைந்துள்ள உயர் மாடிக் கட்டிடத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 3 மணியளவில் இந்த தீப்பரவல் ஏற்பட்டது.
தீப்பரவலை அடுத்து கட்டடத்தின் 7ஆவது தளத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டதுடன், அருகில் இருந்த வீடுகளில் உள்ளவர்களும் வெளியேற்றப்பட்டிருந்தனர் என்றும், அவ்வாறு வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட 20 பேர் வரையானோர் வுவுஊ பேரூந்துகளில் தங்கவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரொரன்ரோ தீயணைப்பு படை அதிகாரிகள் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்றும், அதிகாலை 4 மணிக்கு முன்பாகவே தீப்பரவல் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த தீயணைப்பு நடவடிக்கைக்காக 20 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை மடிக் கணணி ஒன்றில் ஏற்பட்ட மின்ஒழுக்கு காரணமாகவே தீப்பரவல் சம்பவித்ததாகவும், மடிக்கணணியில் இருந்து ஆரம்பமான அந்த தீ, பின்னர் அந்த வீட்டின் சமையல் அறையில் பரவி, ஏனைய இடங்களுக்கும் பரவியதாகவும் அவர்கள் விபரம் வெளியிட்டுள்ளனர்.
– See more at: http://www.canadamirror.com/canada/76920.html#sthash.FEcPdi8W.dpuf