தென் கொரியாவில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 205 ஆவது திருவள்ளுவர் சிலை கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கொரிய தமிழ்ச் சங்கம் சார்பில் ‘முதலாம் பன்னாட்டு இந்திய – தமிழ் – கொரிய ஆய்வு மாநாடு 2026’, ‘கொரிய தமிழ்ச் சங்க விருதுகள் வழங்கும் விழா’ மற்றும் ‘205 ஆம் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா’ ஆகியவை டேஜான் அருகிலுள்ள ஓசோங் அரங்கில் நடைபெற்றன.
இவ்விழாவினைக் கொரிய தமிழ்ச் சங்கம், கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் தமிழ் ஆய்வு மையம் மற்றும் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஒருங்கிணைத்து நடத்தின.
இதுவரை உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் 204 திருவள்ளுவர் சிலைகளை நிறுவியுள்ள விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர், செவாலியர் டாக்டர் வி.ஜி. சந்தோசம், தென் கொரிய மண்ணில் 205 ஆம் திருவள்ளுவர் சிலையினைத் திறந்து வைத்தார்.
சிலையைத் திறந்து வைத்து டாக்டர் வி.ஜி. சந்தோசம் உரையாற்றுகையில்,
“தொழில் செய்து தொண்டு செய்வோம் என்ற நோக்கில் உலகெங்கும் திருவள்ளுவர் சிலைகளை நிறுவித் தமிழ் மொழியினை வளர்த்து வருகின்றோம்.
இன்று 205 ஆவது சிலையினைத் தென் கொரிய மண்ணில் நிறுவுவதனை எண்ணிப் பெருமை கொள்கிறேன். அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பாலைக் கொடுத்த வள்ளுவரது நெறிகளைக் கைக்கொண்டு, மதத்திற்கு அப்பாற்பட்ட நூலாகத் திருக்குறளைக் கருத வேண்டும் என்றார்.
இத்திறப்பு விழாவில் தென் கொரியாவிற்கான இந்திய தூதரக அதிகாரி சுரேஷ் குமார், சுங்சொங்புக்தோ பயோ சி.எஸ். மையத்தின் தலைவர் புரவலர் லியூ ஜெ யொங், சுங்ஜூ மாகாண கல்வியாளர் கிம்தோக்யோ, மேனாள் இலண்டன் மேயர் அப்பு தாமோதரன், சென்னையின் பிரபல மருத்துவர் சொக்கலிங்கம், பேராசிரியர் உலகநாயகி பழனி ஆகியோர் கலந்துகொண்டனர்.
அத்துடன் கொரிய தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் அரவிந்த ராஜா, நிறுவனத் தலைவர் முனைவர் இராமசுந்தரம், முனைவர் மோ. பாட்டழகன், துணைத்தலைவர் தெ. விஜயலட்சுமி, பொருளாளர் பீ. ஜெரோம், செயலாளர் முனைவர் செலஸ்டின் ராஜா, இந்தியத் தொடர்பாளர் முனைவர் பிரபாகரன் மற்றும் பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா, மலேசியா ஆகிய நாடுகளின் தமிழ்ச் சங்கத் தலைவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவின் அங்கமாகப் பன்னாட்டு ஆய்வரங்கம், கண்கவர் கலையரங்கம் மற்றும் மரபு நடைப் பயணம் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளைக் கொரிய தமிழ்ச் சங்க நிர்வாகிகள் மற்றும் பன்னாட்டுத் தொடர்பாளர் தாமோதரன் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.








