இந்தியாவின் கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் உயிரிழந்த இந்து மூதாட்டி ஒருவருக்கு, அவரது விருப்பத்திற்கமைய இஸ்லாமிய சகோதரர்கள் இந்து முறைப்படி இறுதிச் சடங்குகளைச் செய்துள்ளனர்.
வயநாடு மாவட்டம், முப்பைநாடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட சித்ரகிரி கிளப் ஜங்ஷன் பகுதியில் வசித்து வந்த 85 வயதுடைய கல்யாணி அம்மாள் என்பவருக்கே இவ்வாறு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டுள்ளன.
கல்யாணி அம்மாளுக்கு வாரிசுகளோ அல்லது நெருங்கிய உறவினர்களோ இல்லாத நிலையில், அண்டை வீட்டில் வசித்து வந்த ரசாக் மற்றும் அவரது சகோதரர் சுலைமான் ஆகியோரின் குடும்பத்தினர் அவரைத் தங்களது சொந்தத் தாயைப் போலவே கவனித்து வந்துள்ளனர்.
காலப்போக்கில், அவர்களுக்கிடையிலான பாசமும் நெருக்கமும் அதிகரித்துள்ளது. இதனால், தன்னைத் தாயாகக் கருதி கவனித்து வந்த ரசாக் மற்றும் சுலைமான் ஆகியோரே தனது இறுதிச் சடங்குகளையும் செய்ய வேண்டும் என கல்யாணி அம்மாள் விருப்பம் தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வயது முதிர்வு மற்றும் அதனால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக கல்யாணி அம்மாள் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, அவரது இறுதி விருப்பத்தை நிறைவேற்றத் தீர்மானித்த ரசாக் மற்றும் சுலைமான் ஆகியோர், இந்து முறைப்படி இறுதிச் சடங்குகளை முன்னெடுத்து, அவரது சிதைக்கு தீ மூட்டியுள்ளனர்.
கல்யாணி அம்மாளின் இறுதிக்காலத்தில் அவரைக் கவனித்துக்கொண்டதைப் போலவே, அவரது இறுதிச் சடங்குகளைச் செய்யும் பொறுப்பையும் தாங்கள் ஏற்றுக்கொண்டதாக ரசாக் மற்றும் சுலைமான் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மத வேறுபாடுகளைக் கடந்து மனிதநேயத்திற்கும் அன்புக்கும் முக்கியத்துவம் அளிக்கும் இச்சம்பவம், வயநாடு பகுதியில் மத நல்லிணக்கத்திற்கான ஓர் எடுத்துக்காட்டாகப் பார்க்கப்படுகிறது.







