பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை விடுதலை செய்வது தொடர்பிலும், சிறை தண்டனை விதிக்கப்படும் தேரர்களைத் தடுத்து வைப்பதற்குத் தனியானதொரு இடத்தை ஒதுக்குவது தொடர்பிலும் அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் சிறைச்சாலை அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர்.
சிறைச்சாலை ஆணையாளர் (செயற்பாடுகள் மற்றும் ஊடகம்) சேனக்க பல்லேதென்ன உள்ளிட்ட சிரேஷ்ட சிறைச்சாலை அதிகாரிகள் குழுவினர் வெள்ளிக்கிழமை (16) அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களுக்கு விஜயம் செய்து மகாநாயக்க தேரர்களைச் சந்தித்தபோதே இக்கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதன் போது அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர், ஞானசார தேரரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அவரை விடுதலை செய்வதற்கு ஏதேனும் சட்ட அல்லது நிர்வாக நடைமுறைகள் உள்ளதா என்றும் சிறைச்சாலை ஆணையாளரிடம் வினவினார். இதற்குப் பதிலளித்த சிறைச்சாலை ஆணையாளர் சேனக்க பல்லேதென்ன, ஞானசார தேரரின் விடுதலை தொடர்பில் இதுவரை எந்தவொரு நிர்வகிப்புத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, சிறைச்சாலை அதிகாரிகள் மல்வத்து பீடத்தின் மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரரைச் சந்தித்தனர். இதன்போது கருத்துத் தெரிவித்த மல்வத்து மகாநாயக்க தேரர், ஏதேனும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தேரர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டாலோ அல்லது சிறையில் அடைக்கப்பட்டாலோ அவர்களுக்கென தனியானதொரு இடம் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
‘தேரர்களைத் தடுத்து வைப்பதற்காக தனியானதொரு இடத்தை அமைத்து, அங்கு அவர்கள் தங்களது தினசரி சமயக் காரியங்களில் ஈடுபடுவதற்கான சுதந்திரத்தை வழங்க வேண்டும். அத்துடன் அவர்களைச் கண்ணியமான முறையில் நடத்த வேண்டும்,’ என்றும் மகாநாயக்க தேரர் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் முன்னர் கலந்துரையாடலொன்று இடம்பெற்ற போதிலும், அக்கலந்துரையாடல் எவ்வித இறுதித் தீர்மானமும் இன்றி நிறைவடைந்ததாகவும் அவர் இதன்போது அதிகாரிகள் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.













